10,000 தொழிலாளர்களின் 1,888 மில். ரூபா பணத்தை சூரையாடிய நிறுவனங்கள்

கண்டி, மாத்தளை மாவட்டங்களில் சுமார் 10,000 தோட்டத் தொழிலாளர்களுக்கு 18 ஆண்டுகளாக 1,888 மில்லியன் ரூபா ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பன செலுத்தப்படாமை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில், தமது அமைப்பு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததை அடுத்து, அந்தத் தொகை தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட தோட்ட நிறுவனங்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளதாக கண்டி மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி.பி.சிவப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மனித அபிவிருத்தி தாபனத்தின் தலைவர் பி.பி.சிவப்பிரகாசம் மற்றும் தொழிலாளர் ஒத்துழைப்பு சங்கத்தின் தலைவரும் சட்ட ஆலோசகருமான ஏ.செல்வராஜா ஆகியோர் இது குறித்து மேலும் தகவல் வெளியிடுகையில்,

மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம், எல்கடுவ பிளான்டேசன் கம்பனி நிருவகிக்கும் சுமார் 30 தோட்டங்களை சேர்ந்த ஏறக்குறைய 10000 க்கு மேற்பட்ட தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் தோட்ட உத்தியோகத்தர்களுக்கு 2001 ம் ஆண்டு முதல் வழங்கப்படவேண்டிய ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் சேவைக்காலப்பணம் ஏறக்குறைய ரூபா 1888 மில்லியன் வழங்கப்படாதிருப்பதாக தெரியவந்துள்ளது. இத்தொகையானது 2019 வரை மேலும் அதிகரித்து இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

கண்டி, மாத்தளை மாவட்டங்களில் இயங்கும் இந்த பெருந்தோட்ட நிறுவனங்கள் இத்தொழிலாளர் உரிமை மீறலுக்கு பொறுப்பு கூறவேண்டும். இது சம்பந்தமாக கண்டியை மையமாக கொண்டு இயங்கும் தொழிலாளர் ஒத்துழைப்பு சங்கம் மனித அபிவிருத்தி தாபனத்தின் ஆலோசனை மற்றும் வழிக்காட்டலின் அடிப்படையில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து நான்கு ஆண்டுகள் விசாரணையின் பின் மேற்படி தொகை மூன்று தவனைகளுக்குள் ஓன்றறை வருடங்களில் வழங்குவதற்கு பணிப்புரைகள் வழங்கப்பட்டன. இதையிட்டு எமது தாபனம் மகிழ்ச்சியடைகிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்டி மாத்தளை மாவட்டங்களிலுள்ள குறித்த நிறுவனங்கள் நிருவகிக்கும் 30 தோட்டங்களிலுள்ள தோட்டத்தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமலாபநிதி ஊழியர் நம்பிக்கை நிதியம் சேவைக்காலப்பணம் சுமார் ரூபா 1888 மில்லியன் வழங்கப்படாதது தெரியவந்துள்ளது. இத்தொகையானது 2013 ஆம் ஆண்டு கணிப்பீடாகும். இது இன்று மேலும் பாரிய தொகையாக அதிகரித்து இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

எமது தொழிற்சங்கமும், ஸ்தாபனமும் ஒன்றிணைந்து கண்டியிலுள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் அரச பெருந்தோட்ட யாக்கம், எல்கடுவ பெருந்தொட்ட நிறுவனம், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, தொழில் அமைச்சு, நிதி அமைச்சு, தொழில் ஆணையாளர், இலங்கை மத்திய வங்கி, அரச தொழில்வாண்மை அமைச்சு என்பவற்றிற்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தது.

இதையடுத்து, விசாரணைகள் கொழும்பு மனித உரிமை ஆணைக்குழு தலைமை காரியாலயத்திற்கு மாற்றப்பட்டு, சுமார் நான்கு ஆண்டுகள் நடைபெற்ற விசாரணையின் போது, இது சம்பந்தமாக மேற்படி பொறுப்பாளர்களினது பிரதிநிதிகளின் சாட்சியங்கள் பதிவு செய்துக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் கீழ் கண்ட முடிவுரைகளும், பரிந்துரைகளும் வழங்கப்பட்டன.

முறைப்பாட்டாளர் தொழிலாளர்களுக்கு சட்டபூர்வக் கொடுப்பனவுகளை (ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் சேவைகால ஓய்வூதியப்) பணம் முதலியவற்றை வழங்கத்தவறியமை இலங்கை அரசியல் (1978) யாப்பின் உறுப்புரை 12(1) அத்தியாயம் 3 ஐ மீறிய செயலாகும். இவ்வுறுப்புரை, சட்டம் அனைவருக்கும் பொதுவான சமத்துவமான அடிப்படையில் நன்முறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.

பொறுப்பான நிறுவனங்கள் அவற்றின் முகாமைத்துவத்தின் கீழ் 12,000 தோட்டத் தொழிலாளர்கள் பணியாளர்களுக்கு 2000ஆம் ஆண்டிலிருந்து நிலுவையில் இருக்கும் கொடுப்பனவுகளை நிறைசேரியூடாக மூன்று தவணைகளுக்குள் (அதாவது இத்திகதியில் இருந்து 1 1/2 வருடங்களுக்குள்) வங்கியில் கீழ்கண்ட அடிப்படையில் அதாவது,

(அ) 2000 ஆண்டு முதல் – 2006 ஆண்டு காலப்பகுதியில் நிலுவையில் உள்ள தொகையை 01.01.2020 தொடக்கம் 30.06.2020 காலப்பகுதிக்குள்ளும்

(ஆ) 2007 ஆண்டு முதல் 2012 காலப்பகுதியில் நிலுவையில் உள்ள தொகையை 01.06.2020 தொடக்கம் 30.12.2020 காலப்பகுதிக்குள்ளும்

(இ 2013 ஆண்டு முதல் 2018 காலப்பகுதியில் நிலுவையில் உள்ள தொகையை 1.1.2021 தொடக்கம் 30.06.2021 காலப்பகுதிக்குள் வங்கியில் வைப்பிட வேண்டும்

இந்த மூன்று நிறுவன முகாமைத்துவத் தோட்டங்களில் தற்போது தொழில் புரியும் தொழிலாளர்களின் கொடுப்பனவுகளை முறையாக வங்கியில் இடுவதை முகாமைத்துவம் உறுதி செய்வதுடன் தொழில் ஆணையாளர் இச்செயற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்படுகின்றமையை கண்காணிப்பதுடன் தேவையேற்படின் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தொழில் ஆணையாளர் நாயகமும் மத்திய வங்கியும் (அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் பொருந்தும் வகையில்) தொழிலாளர்களுக்கு அரைவருட, மற்றும் முழுவருட கணக்கு அறிக்கைகள் முறையாகக் கிடைப்பதை உறுதி செய்வதற்கான பொறிமுறையொன்றை அமைக்க வேண்டும்; என்றும் குறிப்பிட்டனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த மனித அபிவிருத்தி தாபனத்தின் தலைவர் பி.பி.சிவப்பிரகாசம்,

இந்தத் தொழிலாளர்கள் சார்பாக பெறப்பட்டுள்ள தீர்மானமானது இலங்கை மலையக தொழிலாளர்களுடைய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு மைல் கல்லாகும். இதை ஜனவசம பெருந்தோட்ட யாக்க தொழிலாளர்கள் தெளிவாக அறிந்துக்கொண்டு தங்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், மேற்படி கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காகவும் சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். மேற்படி எமது நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதன் ஊடாக மேலும் பல உரிமைகளை வென்றெடுக்கலாம் என குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435