தனியார் துறை ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2500 ரூபா சம்பளத்தை உரிய முறையில் வழங்காத தொழில் வழங்குநர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படுமாறு தொழில் மற்றும் தொழிற்சங்க தொடர்புகள் அமைச்சர் டப்ளியு.டி.ஜே. செனவிரத்ன தொழில் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
தேசிய நிறுவன ஊழியர் சங்க தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தொழில் அமைச்சில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய அமைச்சர் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதிகரிப்பது தொடர்பான தீர்மானம் சட்டமூலத்தினூடாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் ஊழியர்களுக்கு 2500 சம்பள உயர்வை வழங்காதிருப்பது சட்டத்தை மதிக்காத செயல் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் பயிற்றப்பட்டுள்ளனர். தேவையான ஆலோசனை மற்றும் வழிக்காட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. சட்டமூலம் நிறைவேற்றப்பட்டாலும் பெரும்பாலான நிறுவனங்கள் சம்பள உயர்வை வழங்க தவறியுள்ளன என்று தினமும் முறைப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன. அவ்வனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படும். சம்பள உயர்வை வழங்குவதற்கு தேவையான அளவு காலத்தை நாம் வழங்கினோம். இன்னும் காலம் தாழ்த்த முடியாது. சட்டத்திற்கமைய சட்ட வழக்கு தொடர்வோம் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சம்பள வளர்ச்சி மற்றும் சம்பள உயர்வு என்பது இரு விடயங்கள். வருடாந்தம் அதிகரிக்கப்படும் சம்பள அதிகரிப்பை கட்டாயம் வழங்க வேண்டும் என்பதை தௌிவாக கூறிக்கொள்கிறோம். வரவு செலவு கொடுப்பனவிற்கமைய அதிகரிக்கப்பட்ட 2500 ரூபாவை 2005 வரவு செலவில் பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டதை போன்றே வழங்கப்பட வேண்டும்.
எமது அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் பயிற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் அது தொடர்பில் நாம் நடவடிக்கை எடுப்போம். இச்சம்பள அதிகரிப்பு தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தொழில் திணைக்களத்தில் நிறுவப்பட்டுள்ள குழுவிடம் எழுத்து மூலம் வழங்குமாறு தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொள்கிறேம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வேலைத்தளம்