வெளி மாவட்ட மீனவர்களின் ஊடுருவலினால் முல்லை மாவட்ட மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து ஆராய்ந்து 7 தினங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக் குமாறு கடற்றொழில் அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவினர் 50 தினங்கள் கடந்த நிலையிலும் அறிக்கை தயாரிக்காமல் மௌனம் கடைப்பிடிப்பதனால் முல்லை மாவட்ட மீனவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இக்குழுவின் நிலைப்பாடு குறித்து விசனம் தெரிவித்துள்ள மீனவர்கள், தங்கள் வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சைக் கோரியுள்ளனர்.
முல்லை மாவட்ட கடற்பரப்பில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் அத்து மீறித் தொழில் செய்வதுடன், சட்டவிரோதமான முறையில் தடை செய்யப்பட்ட தொழில் களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் முல்லை மாவட்ட மீனவர்கள் தொழில் ரீதியாகப் பாதிக்கப்பட்டு வருவதுடன் கடலுணவுகளின் உற்பத்தியிலும் வீழ்ச்சி ஏற்படுகின்றது.
இந்த நிலை குறித்துப் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடமும் கடற்றொழில் அமைச்சரிடமும் பல தடவைகள் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து இதற்கு சமரசமான முறையில் தீர்வு காண முன்வந்துள்ள கடற்றொழில் அமைச்சர் கடந்த மாதம் 2ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திற்குவருகை தந்து பாதிக்கப்பட் மீனவர்களுடனும் திணைக்கள அதிகாரிகளுடனும் கலந்துரையாடியிருந்தார்.
இதையடுத்து இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு எட்டும் வகையில் வெளிமாவட்ட மீனவர்களின் ஊடுருவல் பற்றியும் எத்தனை மீனவர்கள் தொழிலில் ஈடுபடுகிறார்கள், இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்பன பற்றியும் விரிவாக ஆராய்ந்து ஒருவார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக திட்டமிடல் கண்காணிப்பு பணிப்பாளர் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்திருந்தார். இக்குழுவில் கரைதுறைப்பற்று பிரதேச செயலர், முல்லை மாவட்ட கடற்றொழில் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் உட்பட பல அதிகாரிகள் அங் கம் வகிக்கிறார்கள்.
ஒரு வார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நியமிக்கப்பட்டுள்ள இக்குழு ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும் இன்றுவரை அறிக்கை தயாரிக்காமல் மௌனம் கடைப் பிடித்துள்ளது. குழுவின் அசமந்தப் போக்கு குறித்து விரக்தியடைந்துள்ள பாதிக்கப்பட்ட மீனவர்கள் வெளிமாவட்ட மீனவர்களின் ஊடுருவலைத் தடுப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்டவர் ளைக் கோரியுள்ளனர்.
வேலைத்தளம்