கட்டார் பொது மன்னிப்புக்காலத்தை புறக்கணித்த 450 இலங்கையர்

வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் நாடு திரும்பாமல் மீண்டும் சட்டவிரோதமாக வேறு நாடுகளுக்கு சென்றுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 450 என கட்டார் தொழிலாளர் திணைக்களம் அறிவித்துள்ளதாக கல்ப் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கட்டாரில் சட்டவிரோதமாக தங்கியிருந்து தொழில் செய்யும் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்காக வழங்கப்பட்ட பொது மன்னிப்புக்காலம் எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையிலேயே தொழிலாளர் திணைக்களம் இத்தரவை வெளியிட்டுள்ளது.

சட்டவிரோதமாக தங்கியிருந்து தொழில் செய்யும் புலம்பெயர் தொழிலாளர்கள் எவ்வித அபராதமும் செலுத்தாமல் சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் கடந்த செப்டெம்பர் மாதம் வழங்கப்பட்ட மூன்று மாதகால பொது மன்னிப்புக்காலம் இவ்வருடம் டிசம்பர் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

புலம்பெயர் தொழிலாளரின் நன்மை கருதி சட்டவிரோத புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்புக்காலம் வழங்கப்பட்ட போதிலும் அதனை பயன்படுத்த அவர்கள் தவறியுள்ளனர் என்று கட்டார் அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

பொது மன்னிப்புக்காலம் வழங்கப்பட்டிருந்த போதிலும் சட்டவிரோதமாக வேறு நாடுகளுக்கு செல்வது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள கட்டார் உள்விவகார அமைச்சு, அவ்வாறு சுமார் ஆயிரம் பேர் வரை சட்டவிரோதமாக வேறிடங்களுக்கு சென்றுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

மூன்று மாத பொது மன்னிப்புக் காலம் வழங்கி 6 வாரங்கள் கடந்த நிலையிலேயே இத்தொழிலாளர்கள் வேறிடங்களுக்கு சென்றுள்ளனர் என்றும் அவ்வாறு சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் பங்களாதேஷ், நேபாளம், மற்றும் இலங்கையர்கள் என்றும் கட்டார் தொழிலாளர் திணைக்களத்தின் செயலாளர் மொஹம்மட் ரபியுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சட்டவிரோதமாக கட்டாரில் தங்கியிருந்த பணியாற்றிய 700 பங்களாதேஷ் பிரஜைகளும் 229 நேபாள பிரஜைகளும் தமக்கு வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்புக் காலத்தை பயன்படுத்தி தாய் நாட்டுக்குச் செல்லவுள்ளனர் என்று தொழிலாளர் திணைக்கள செயலாளர் மேலும் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக தங்கியிருப்போர் தாய்நாட்டுக்கு திரும்புவதற்காக கட்டார் அரசு மூன்றாவது தடவையாக இப்பொதுமன்னிப்புக் காலத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435