பட்டதாரி ஆசிரியர்களை ஆசிரியர் நியமனத்திற்கு இணைத்துக்கொள்வதற்காக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நடத்தப்படவுள்ள போட்டிப்பரீட்சையில் தோற்றுவதற்கு 45 வயதுக்கு ஒரிரு மாதங்கள் அதிகரித்தவர்களுக்கு பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்படவில்லை என்று கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் எம். பி. நஸுறுதீன் தெரிவித்துள்ளார்.
குறித்த போட்டிப்பரீட்சைக்கு 45 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 45 வயது கடந்து ஓரிரு மாதங்கள் ஆனவர்களும் விண்ணப்பித்திருந்தனர். எனினும் அவர்களுக்கு போட்டிப்பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் இதுவரை கிடைக்கவில்லை. அவர்களையும் இப்போட்டிப்பரீட்சைக்கு உள்வாங்குமாறு ஒன்றியத்தின் தலைவர் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. முத்துபண்டாரவிற்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்.
இவ்வாறு 45 வயது கடந்து ஓரிரு மாதங்கள் ஆகியுள்ள 20 பட்டதாரிகள் உள்ளனர். இதனால் இப்பட்டதாரிகள் கடுமையான மன உழைச்சலுக்காலாகியுள்ளனர். கடந்த ஆறு வருடங்களாக அரசாங்கம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்காமையினாலேயே இப்பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கவனத்திற்கொள்ளவேண்டும். அப்பட்டதாரிகளுடைய எதிர்கால நலனை கருத்திற்ககொண்டு அவர்களை புறந்தள்ளிவிடாது போட்டிப்பரீட்சைக்கு அவர்களை உள்வாங்குவற்கு கிழக்கு மாகாணசபையில் விசேட சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது