50 ரூபா எங்கே?

மௌனம் சாதிக்கும் அரசாங்கமும், தமிழ் முற்போக்கு கூட்டணியும்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா நாளாந்த மேலதிக கொடுப்பனவை வழங்குவதாக உறுதியளித்து, இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் அது இன்றுவரை வழங்கப்படவில்லை.

அரசாங்கமும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் இந்த விடயத்தில் தொடர்ந்தும் அமைதி காத்து வருகின்றது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா நாளாந்த அடிப்படை வேதன கோரிக்கை கூட்டு ஒப்பந்தத்தில் நிராகரிப்பட்டது. 700 ரூபா நாளாந்த அடிப்படை வேதனமே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தங்களுக்கு கிடைத்த வெற்றி என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான், பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் விமர்சனம் வெளியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரான அமைச்சர் மனோ கணேசன் மற்றும் பிரதித் தலைவரான அமைச்சர் பழனி திகாம்பரம் ஆகியோர், ஒப்பந்தத்தில் விடுபட்ட 140 ரூபா என்ற வரவு மற்றும் மேலதிக கொடுப்பனவை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தனர்.

எனினும், அந்த 140 ரூபாவில் 50 ரூபாவை மாத்திரமே பெற்றுக்கொடுக்க அரசாங்கம் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அவர்களால் இயலுமாகவிருந்தது.

இதையடுத்து, பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தில் 50 ரூபா மேலதிக கொடுப்பனவை இணைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டது.

இது தொடர்பான அறிவித்தல் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிவிப்பில் வெளியிடப்படும் என அவர்கள் தெரிவித்தபோதும், நிதி அமைச்சரின் வரவு செலவுத் திட்ட அறிவிப்பில் இந்த 50 ரூபா விடயம் உள்ளீர்க்கப்பட்டிருக்கவில்லை.

வரவு செலவுத் திட்டத்தில் உள்ளீர்க்கப்படாவிட்டாலும், வேறு முறைமையின் அடிப்படையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அந்த 50 ரூபா மேலதிக நாளாந்த கொடுப்பனவு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

இதனடிப்படையில், மே மாதம் முதல் ஒரு வருடத்திற்கு 50 ரூபா நாளாந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியினால் உறுதியளிக்கப்பட்டது.

எனினும், உறுதியளிக்கப்பட்டவாறு கடந்த மே மாதம் அந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டிருக்கவில்லை. அதன் பின்னர் ஜுன் மாதமும் அந்தக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை. எனினும், இது குறித்து அரசாங்கமோ அல்லது அமைச்சர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம் ஆகியோர் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதனையும் வெளியிடவில்லை.

கூட் டுஒப்பந்தம் ஊடாக தாங்கள் எதிர்பார்த்த 1,000 ரூபா நாளாந்த அடிப்படை வேதனம் வழங்கப்படாத நிலையில், மேற்படி அமைச்சர்களும், அரசாங்கம் உறுதியளித்த 50 ரூபா நாளாந்த மேலதிக கொடுப்பனவும் இதுவரை வழங்கப்பட்டாத காரணத்தினால், தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு மத்தியில், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் துன்ப நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

ஆனபோதும், குறித்த 50 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீட்டை நிதி அமைச்சு இதுவரை மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார், அண்மையில் நாடாளுமன்றில் அரசாங்கத்திடம் கோரிக்கையையும் முன்வைத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்திருந்த இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ், 50 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும், அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், இன்றுவரை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபா நாளாந்த மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கை குறித்து அரசாங்கத்திடமிருந்து எவ்வித அறிவிப்புகளும் வெளியாகவில்லை.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள், 50 நாளாந்த மேலதிக கொடுப்பனவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், ஜுலை மாதத்துடன் 3 ஆவது மாதமாக காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை நாளாந்த வேதனைத்தைப் பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால், கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுமாறு சம்பந்தட்ட தொழிற்சங்கத் தலைவர்களுக்கு அப்போது தமிழ் முற்போக்கு கூட்டணியினர் தெரிவித்திருந்தனர்.

ஆனால், அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் முற்போக்கு கூட்டணியினர் நடத்திய பேச்சுவார்த்தையில் 50 ரூபா மேலதி கொடுப்பனவை வழங்குவதற்கு உறுயதிக்கப்பட்டு, இரண்டு மாதங்கள் கடத்துள்ள நிலையில், அந்தக் கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோரும் அரசாங்கத் தரப்பினரும், 50 ரூபா கொடுப்பனவு பெற்றுக்கொடுப்பது தொடர்பாக எந்தவொரு கருத்தையும் வெளியிடாதுள்ளனர்.

அரசாங்கமும், அமைச்சர்களும் வாக்குறுருதியளித்தவாறு. 50 ரூபா நாளாந்த மேலதிக கொடுப்பனவு கிடைக்காதமையினால் தாங்கள், ஏமாற்றமடைந்துள்ளதாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு மத்தியில், ஜுலை மாதம் 50 ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜா- வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435