ஓமானில் மலிந்து போயிருக்கும் பாலியல் தொழிலை கட்டுப்படுத்துவதற்காக சுற்றுலா வீசாவுக்கான சட்ட திட்டங்களை கடுமையாக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்ப் நியுஸ் செய்தி வௌியிட்டுள்ளது.
வௌிநாட்டுப் பெண்கள் சுற்றுலா வீசாவை பயன்படுத்தி ஓமானுக்கு செல்லும் பெண்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் தொழிலாளர்களாக பணியாற்றுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அண்மையில் ஓமானில் பல்வேறு பிரதேசங்களில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது சுற்றுலா வீசாவை பயன்படுத்தி ஓமானுக்கு சென்று பாலியல் தொழில் ஈடுபட்டிருந்து நூற்றுக்கணக்கான தெற்காசியப் பெண்களை ஓமான் அரச பொலிஸார் கைது செய்யததாக செய்திகள் வௌியாகியுள்ளன.
இதற்கமைய பெண்களுக்கு வழங்கப்படும் ஓமான் சுற்றுலா வீஸா 10 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். நிகழ்காலத்தில் ஒரு மாத காலத்திற்கு சுற்றுலா வீசா வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஓமான் தலைநகரில் அமைந்துள்ள ஸீஷா கபே மற்றும் வீதியோரங்களில் காத்திருக்கும் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வௌியாகியுள்ளன. இவை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இந்நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேச மக்கள் இந்நிலை தொடர்பில் தமது வெறுப்பை வௌிப்படுத்தியுள்ளதுடன் இரவு 9.00 மணி தொடக்கம் மறுநாள் காலை வரை வீதிகளில் இப்பெண்கள் நடமாடுவதைக் காணக்கூடியதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 21 தாய்லாந்து பெண்களை பொலிஸார் மீட்டுள்ளனர். அத்தொழிலை நடத்தி வந்த மேலும் 3 தாய்லாந்து பிரஜைகளும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலைமையில் இருந்து மீள்வதற்காக ஓமான் அரசு கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.