சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கையருக்கு இதுவரையில் நட்டஈடு கிடைக்கவில்லை என்று அவருடைய குடும்பத்தினர் விசனம் தெரிவித்துள்ளனர்.
சம்பாந்துறையைச் சேர்ந்த ஏ.ஆர்.ஏ.எம் முபாஸ் என்பவரே கடந்த 2014ம் ஆண்டு ஓகஸ்ட் 27ம் திகதி ரியாத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்றும் மூன்று வருடங்கள் கடந்த நிலையில் இதுவரை எவ்வித நட்டஈடும் கிடைக்கவில்லை என்றும் அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
1989ம் ஆண்டு பிறந்த முபாஸ் கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் திகதி சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள நிறுவனமொன்றில் வேலைக்காக சென்றார் என்றும் 2014ம் ஆண்டு வேலை செய்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தொன்றின் போது உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நட்டஈட்டை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு என்பவற்றுக்கு பல தடவைகள் கடிதங்கள் அனுப்பியபோதிலும் இதுவரையில் எவ்வித பயனும் கிட்டவில்லையென்றும் குடும்பத்தின் வறுமையைக் கருத்திற்கொண்டு நட்டஈட்டை விரைவில் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் குடும்பத்தினர் கோரியுள்ளனர்.