சவுதி அரேபியாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இலங்கை பணிப்பெண்ணின் சடலம் இன்னும் இரு வாரங்களில் நாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
பிரேத பரிசோதனை செயற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அது நிறைவடைந்த பின்னர் சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 38 வயதான பிரியந்தா ஜயசேக்கர சில வாரங்களுக்கு முன்னர் சவுதி பிரஜையொருவரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அதன் பின்னர் குறித்த நபரும் அதே துப்பாக்கியில் தனக்குத்தானே சுட்டுக்கொண்டு இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கை வௌியான பின்னரே சடலம் விடுவிக்கப்படும் என்றும் அதற்கு மேலும் இரு வாரங்கள் வரை தேவைப்படலாம் என்றும் பணியகத்தின் வௌிவிவகாரங்களுக்கான மேலதிக பொது முகாமையாளர் டப்ளியு.எம்.வி வனசேக்கர தெரிவித்தார்.
இதேவேளை, கொலைசெய்யப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு அண்மையில் விஜயம் செய்த வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ மற்றும் பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் அவரது குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.