ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான இலங்கையர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் தனிமைக்குட்படுத்தப்பட்டு சிறந்த முறையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக அபுதாபிக்கான இலங்கை தூதரகம் இன்று (11) வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சில போலியான தகவல்களுடன் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் உலாவருகின்றன. அவை உண்மைக்கு புறம்பானவை. ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கையர்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்நாட்டு அரசாங்கம் இலங்கையர்களுக்கு வழங்கும் சேவை பாராட்டத்தக்கது.
இதேவேளை, இலங்கை தூதரகம், இலங்கை கொன்சியுலேட் ஜெனரல் அலுவலகம், ஆகியன இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், நலன்புரி நிறுவனங்கள் மற்றும் சமய நிறுவனங்களுடன் இணைந்து ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு அவசியமான உலர் உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது.
வௌிவரும் தகவல்களை இலங்கைத் தூதரகம் அல்லது இலங்கை கொன்சியுலர் ஜெனரல் அலுவலகம் என்பவற்றுடன் தொடர்புகொண்டு உண்மை தன்மை குறித்து பொது மக்கள் ஆராய வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.