குவைத் வாழ் இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு காலம் மற்றும் கொவிட் 19 தொற்று காலப்பகுதியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் விசேட அறிவித்தலொன்றை வௌியிட்டுள்ளது. குறித்த அறிவித்தல் கீழே தரப்பட்டுள்ளது.
1. கோவிட் 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கைய மற்றும் குவைத் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், குவைத் அரசினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ள பொது மன்னிப்பு தொடர்பிலும் விமான நிலையம் மீளத் திறக்கப்பட்டதன் பின்னர் இலங்கையர்களை இலங்கைக்கு அனுப்புதல் சம்பந்தமாகவும் இரு அரசுகளும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றன.
2. இந்த பொதுமன்னிப்பு தொடர்பாக கடந்த ஏப்தல் 16 ஆம் திகதியன்று இலங்கையின் பிரதமர் கௌரவ மகிந்த ராஜபக்ச அவர்கள் குவைத் நாட்டின் பிரதமர் அதிமேதகு ஷேக் ஸபாஹ் காலித் அல்-ஹமத் அல் ஸபாஹுடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடலொன்றை நிகழ்த்தியிருந்தார். இதற்கு முன்னர் இலங்கையின் வௌியுறவுகள், திறன்கள் விருத்தி, வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் கௌவர தினேஷ் குணவர்தன அவர்களும் குவைத் நாட்டின் வௌிவிவகார அமைச்சர் கௌரவ அஹ்மத் நாஸர் அல் முஹம்மத் அல் ஸபாஹுடன் இது தொடர்பில் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியிருந்தார்.
3. மேற்படி தொலைபேசி கலந்துரையாடல்களை தொடர்ந்து பொதுமன்னிப்பு காலப்பகுதியை இலங்கையர்களுக்கு நீடித்துக் கொடுப்பது தொடர்பில் பரிசீலனை செய்வதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பை மிக விரைவில் எதிர்பார்க்கிறோம்.
4. தற்போது செல்லுபடியாகும் கடவுச்சீட்டொன்றை வைத்திருக்கும் இலங்கையர்கள் தாம் விரும்பினால் குவைத் அரசினால் இலங்கையர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு இம்மாதம் 21 -25ம் திகதி வரையான காலப்பகுதியில்செல்ல முடியும். அவ்வாறு சென்று தம்மை பதிவு செய்பவர்கள் முதற் கட்டமாக தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்படுவர். அத்தோடு இவ்வாறு தங்குவோர் அவ்விடங்களிலிருந்து வௌியேறவோ வேறு இடங்களுக்கு செல்லவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த ஏற்பாடுகள் இலங்கையில் விமான நிலையம் திறக்கப்பட்டு, வருகை தருவோரை ஏற்றுக்கொள்வதற்குரிய ஏற்பாடுகள் முடியும் வரையிலும் தொடரும்,
5. கடவுச்சீட்டு அல்லது தற்காலிக பயண ஆவணம் இல்லாத நிலையில் பொது மன்னிப்பில் நாடு செல்ல இலங்கையர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்லும் இலங்கையர்களது பதிவு விண்ணப்பங்கள் குவைத் அதிகாரிகளால் நிராகரிக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாகும். எனவே, கையில் கடவுச்சீட்டு அல்லது தற்காலிக பயண ஆவணம் இல்லாதோர் தூதரகத்தின் மறு அறிவித்தல் வரை காத்திருக்குமாறும், தற்போது அவர்கள் தங்கியுள்ள வதிவிடங்களிலிருந்து வௌியேற வேண்டாம் என்றும் வினயமாக கேட்டுக்கொள்கிறோம். இலங்கையில் விமான நிலையம் திறக்கப்படுவது சம்பந்தமாகவும், வருகைத் தருவோரை ஏற்றுக்கொள்வதற்குரிய ஏற்பாடுகள் பூர்த்தியடைதல் சம்பந்தமாகவும் இலங்கையிலிருந்து தகவல் வந்த பின்னர் கடவுச்சீட்டு இல்லாதோருக்கான பயண ஆவண விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது சம்பந்தமாக குடிவரவு, குடியல்வு திணைக்களத்துடன் ஆலோசனைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நடைமுறைக்காக இறுதியாக பயன்படுத்திய கடவுச்சீட்டின் பிரதியை தயாராக வைத்துக்கொள்ளுங்கள். இவ்விண்ணப்பங்களை ஏற்கும் இடம், காலம் குறித்து மேலதிக விபரங்களை தூதரகம் அறிவிக்கும் வரை காத்திருக்குமாறு உங்களை வினயமாக கேட்டுக்கொள்கிறோம்.