நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பகல் நேர தொழிலாளர்களுக்கு உத்தேச காலத்துக்கு முன்னர் பகல் நேர ஓய்வை வழங்குமாறு ஓமான் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
எதிர்பார்த்ததை விடவும் இக்காலப்பகுதியில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக பகல் நேர ஓய்வை வழங்குமாறு கோரிகை விடப்பட்டுள்ள போதிலும் அந்நாட்டு தொழிலாளர் சட்டத்திற்கமைவாகவே ஓய்வை வழங்க முடியும் என்று ஓமான் மனித வள அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து மனித வள அமைச்சின் பேச்சாளர் சலீம் அல் சாதி கருத்து தெரிவிக்கையில் கடந்த 2008ஆம் ஆண்டு அமைச்சின் தீர்மானத்தின் படி ஒவ்வொரு வருடமும் வௌிப்புறத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு நன்பகலுக்கு பின்னர் ஓய்வு வழங்கப்பட வேண்டும். இந்த நன்பகலுக்கு பின்னரான ஓய்வு ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பமாகிறது. இவ் ஓய்வு நேரமானது நன்பகல் 12.30 மணி தொடக்கம் பிற்பகல் 3.30 மணிவரை வழங்கப்படுகிறது.
தொழிலாளர்களின் அரோக்கியம் மற்றும் பாதுகாப்பை கருத்திற்கொண்டு வழங்கப்படும் இந்த ஓய்வை கடந்த வருடம் பல நிறுவனங்கள் மீறியுள்ள போதிலும் இம்முறை அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
எது எவ்வாறிருப்பினும் தொழிலாளியின் நலனே முக்கியம் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது ஓமானின் வெப்பநிலை 40 செல்சியஸ் பாகையாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.