வெளிநாட்டிலுள்ள ஆவணங்களற்ற தொழிலாளர்களுக்கு தற்காலிகமான பயண ஆவணங்களை வழங்குவதற்கான முறைமைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது,
முறையான அங்கீகார நடைமுறைகளைப் பின்பற்றி வெளிநாட்டிலுள்ள ஆவணங்களற்ற தொழிலாளர்களுக்கு தற்காலிகமான பயண ஆவணங்களை வழங்குவதற்கான முறைமைகள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
வெளிநாட்டு உறவுகள் அமைச்சு, திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியவற்றுக்கு இடையிலான ஆலோசனைகளைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கான கால அளவு தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டவுடன், அவர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கான வசதிகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் சம்பந்தப்பட்ட வரிசை முகவர்களுடன் இன்று (04 மே 2020) கூட்டப்பட்ட சந்திப்பின் போது இது குறித்து கலந்துரையாடப்பட்டது.
நாடு திரும்புவதற்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் ‘இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்’ இணைய முகப்பின் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட ஆர்வம் மற்றும் தற்போது குவைத் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளால் அறிவிக்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு ஆகியன குறித்து இதன் போது மதிப்பாய்வு செய்யப்பட்டன.
குறிப்பாக மாலைதீவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் மற்றும் அதை நிவர்த்தி செய்வதற்கான சாத்தியமான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் புலம்பெயர்ந்த சமூகங்களுக்கு உலர் உணவுகளை வழங்குவதற்காக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமும் மதிப்பாய்வு செய்யப்பட்டது.
நாட்டிற்கு மீள அழைத்து வரப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்தின் போதும் தற்போதைய தனிமைப்படுத்தல் செயன்முறை நடைமுறைப்படுத்தப்படுவதனை உறுதிசெய்யும் அதேநேரத்தில், சம்பந்தப்பட்ட வெளிநாட்டு அரசாங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் மற்றும் அந்த அரசாங்கங்களுக்கு பதிலளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் குறித்து வருகை தந்திருந்தவர்களுக்கு அமைச்சர் குணவர்தன விளக்கமளித்தார்.
வெளிவிவகார செயலாளர் ரவினாத ஆரியசிங்க, திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) சுஜீவ திசேரா, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் சரத் ரூபசிறி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பின் போது கலந்து கொண்டனர்.
வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு