கட்டாரில் வீட்டிலிருந்து வெளியேறும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாரின் பிரதமரும், உள்துறை அமைச்சருமான அஷ்ஷெய்க காலித் பின் கலீபா பின் அப்துல் அஸீஸ் அல்தானியின் தலைமையில் வீடியோ கான்பெரன்ஸ் மூலம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கட்டாரிலுள்ள அனைவரும் (குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள்) இன்று முதல் (மே-17) மறு அறிவித்தல் வரும் வரை வீட்டிலிருந்து வெளியேறும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த ஒரு காரணத்திற்காக வெளியேறினாலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். ஆனால் ஓட்டுநர்கள் வாகனத்தில் இருக்கும் போது இது அவசிமில்லை எனவும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
இந்த சட்டம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் உள்துறை அமைச்சு எடுக்கும் என்பதோடு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த நடைமுறை பின்பற்றப்படவுள்ளது..
இந்த முடிவுக்கு கட்டுப்படாதவர்கள் கத்தாரின் 1990ம் ஆண்டு 17ம் இலக்க தொற்று நோய் சட்டத்தின் படி 3 வருட சிறை தண்டனை மற்றும் 2 இலட்சம் றியால்கள் அபராதம் அல்லது மேற்படி தண்டனைகளில் இரண்டில் ஒன்றுக்கு ஆளாக வேண்டி வரும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம் : கட்டார் தமிழ்