குடியேறிகள் தொடர்பான சட்டத்தை மேலும் பலப்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக த ஒஸ்ட்ரேலியன் நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலிய குடியுரிமையை பெற எதிர்பார்ப்பவர்கள், ஆங்கில மொழி மற்றும் அவுஸ்திரேலியா தொடர்பான தமது அறிவை உறுதிப்படுத்த வேண்டும் என அந்நாட்டுச் பிரதமர் மெல்கம் டென்புல் அறிவித்திருந்தார்,
இந்த நிலையில், இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர்களுள் பெரும்பாலானோர் வாழும் அவுஸ்திரேலியாவில் குடியுரிமையை பெற்றுக்கொள்வதை மேலும் கடினமாக்குவதற்காக சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அமுலில் இருந்த சட்டத்துக்கமைய, அவுஸ்திரேலியாவில் நிலையான பதிவினைக் கொண்டவராக ஒரு வருடத்தை பூர்த்தி செய்தவர்கள், அந்நாட்டு குடியுரிமையைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் உரிமை காணப்பட்டது.
இந்த நிலையில், நான்கு ஆண்டுகள் நிலையான பதிவினைக் கொண்டிருந்தால் மட்டுமே அவுஸ்திரேலிய குடியுரிமையைப் பெற விண்ணபிக்க முடியும் என புதிய சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, வெளிநாட்டவர்களுக்கு அவுஸ்திரேலிய விஸா அனுமதிப் பத்திரத்தை வழங்குவது தொடர்பான முறைமையை கடினமாக்குவதாக அறிவிக்கப்பட்டு சில தினங்களில் இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.