கொவிட் 19 தொற்று காரணமாக உலகம் பூராவும் 600 இற்கும் அதிகமான தாதியர்கள் உயிரிழந்துள்ளனர். 450, 000 இற்கும் அதிமான சுகாதாரத்துறை அதிகாரிகள் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று சர்வதேச தாதியர் கவுன்சில் தெரிவித்துள்ளது.
முப்பதிற்கும் அதிகமான நாடுகளில் இருந்து இத்தரவுகள் பெறப்பட்டுள்ளன என கவின்சில் தெரிவித்துள்ளது.
கடந்த இரு மாதங்களில் இறந்தோர் எண்ணிக்கை 100 இலிருந்து 600 ஆக அதிகரித்துள்ளது. பல நாடுகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் தொடர்ந்து வைரஸ் தொற்றுக்குள்ளாகி வருகின்றனர். தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தாதியர் கவுன்சிலின் தலைமை அதிகாரி ஹோவர்ட் கெடன் தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களில் 7 சதவீதமானவர்கள் சுகாதார சேவை ஊழியர்களாவர். தொகையை விடவும் தொற்றுக்குள்ளாகிய தாதியர் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். ஏனைய சுகாதார சேவை ஊழியர்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
நாட்டுக்கு நாடு கொவிட் 19 தொற்றுக்குள்ளாகும் சுகாதாரத்துறை ஊழியர்களின் எண்ணிக்கை வேறுபடுகிறது. குறிப்பாக சிங்கப்பூரில் தொற்றுக்குள்ளாகிய சுகாதாரத்துறை ஊழியர்களின் எண்ணிக்கை ஒரு வீதமாகவும் அயர்லாந்தில் 30 சதவீதமாகவும் உள்ளது. ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொவிட் 19 தொற்று அதிகமாக காணப்பட்டபோதிலும் சுகாதாரத்துறை ஊழியர்களின் மரணம் மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளது. கொவிட் 19 தொற்று பரவும் புதிய கேந்திரநிலையமாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் தாதியர்களின் மரணம் அதிகரித்துள்ளது என உலக சுகாதார தாபனம் தெரிவித்துள்ளது.
சுகாதாரத்துறை ஊழியர்கள் தொடர்பான சரியான தரவுகளை வழங்குமாறும் அவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அனைத்து நாடுகளிடமும் சர்வதேச தாதியர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.