பெற்றோரின் கவனயீனமே பிள்ளைகள் மாடியில் இருந்து விழுவதற்கு பிரதான காரணமாக அமைந்து விடுவதாக அபுதாபி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜன்னல்கள் மற்றும் பல்கணிகளில் இருந்து பிள்ளைகள் விழுந்து இறக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதையடுத்து பொலிஸார் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்புக்களில் வசிக்கும் பெற்றோர் பிள்ளைகள் மாடிகளின் பல்கணி மற்றும் ஜன்னல்களில் இருந்து விழுந்துவிடாமல் பாதுகாப்பாக இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைளை முன்கூட்டியே மேற்கொள்ள தவறிவிடுகின்றனர். அல்லது பிள்ளைகளை கவனிக்க தவறிவிடுகின்றனர். இதுவே பிள்ளைகளின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிப்பதாக அமைந்துவிடுகிறது.
சிறுபிள்ளைகள் இருக்கும் வீடுகளில் பெற்றோர் மற்றும் பாதுகாவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஜன்னல் மற்றும் பல்கணி கதவுகளை பூட்டி சாவியை பிள்ளைகளுக்கு எட்டாதவகையில் பாதுகாப்பான இடங்களில் வைக்க வேண்டும்.
ஜன்னல்களுக்கு அருகில் தளபாடங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்களை வைக்காதிருப்பதனூடாக பிள்ளைகள் எதிர்நோக்கும் இத்தகைய ஆபத்துக்களை தவிக்க முடியும். பிள்ளைகள் அவற்றில் ஏறி வௌி வீதிகளில்என்ன நடக்கிறது என்பதை அறிய ஜன்னலினூடாக எட்டிப்பார்க்கின்றனர். எனவே பெற்றோர் அவதானமாக இருக்கவேண்டும்.
கடந்த மே மாதம் 12ம் தர மாணவன், தனது சகோதரனுடன் பல்கணியில் காற்பந்து விளையாடிக்கொண்டிருக்கும் போது தவறி விழந்து இறந்து போனார். அதேபோல் மார்ச் மாதம் 10ம் திகதி ஆறு வயது ஒடிசம் நோயுடன் கூடிய மாணவர் சார்ஜாவில் உள்ள அவருடைய 11வது மாடியில் உள்ள வீட்டில் திறந்திருந்த ஜன்னலுக்கு அருகில் இருந்த கதிரையில் ஏற முற்பட்டபோது விழுந்து உயிரிழந்தார் என்று அபுதாபி பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.