முன்னர் திட்டமிட்டபடி பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் செயற்படுத்துவது பிற்போடப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் விமானத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக கொவிட் 19 தொற்று பரவல் அதிகரித்துள்ளமையை கருத்திற்கொண்டு இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் டெய்லி எப்டி இணையதளத்திற்கு தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச விமான நிலையம் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த சரியான தினத்தை அறிவிப்பது தற்போது சாத்தியமற்றது. கொவிட் 19 பரவல் குறித்தும் உலகின் பல நாடுகளில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர் குறித்தும் தற்போது அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் கவனம் செலுத்துகின்றனர். அதனால்தான் தற்போது புலம்பெயர் தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்து வரும் செயற்பாட்டை அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.
நாளை (14) தொடக்கம் வௌிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவது இடைநிறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குள்ள பற்றாக்குறை காரணமாகவே மீள அழைப்பது பிற்போடப்பட்டுள்ளது. தற்போதைய பரவல் நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதையடுத்து மீண்டும் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள்.
சுகாதார அதிகாரிகள் ஆலோசனைகள் குறித்த நாம் அவதானித்து வருகிறோம், அதற்கமைய தீர்மானங்கள் எடுக்கப்படும். சுமார் 65 நாடுகளில் இருந்து 15,000 இலங்கையர்கள் நாட்டுக்கு மீள அழைப்பிக்கப்பட்டுள்ளனர். ஜோர்தானில் இருந்து முதற்தடவையாக இன்று அழைத்து வரப்படவுள்ளர்.மாலைதீவில் இருந்தும் இலங்கையர்கள் அழைத்து வரப்படுவார்கள்
புலம்பெயர் தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு 4 விமானங்கள் இவ்வாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என வௌிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சுமார் 50,000 இலங்கையர்கள் நாடு திரும்ப எதிர்பார்த்துள்ளனர். அவர்களில் 40,000 பேர் தொழில்நிமித்தம் சென்றவர்கள், 30,000 பேர் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றுகின்றவர்கள் என வௌிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.