எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் உலா வரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று சவுதி அரேபிய விமான போக்குவரத்து ஆணையம் The General Authority of Civil Aviation (GACA) தெரிவித்துள்ளது.
சவுதியில் தடை செய்யப்பட்டுள்ள சர்வதேச விமான சேவை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான செய்தி கடந்த சில தினங்களாக சமூகவலைத்தளங்களில் உலா வருவது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவ்வாணையகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் ஓகஸ்ட் முதலாம் திகதி சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிக்க சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது என சமூக வலைத்தளங்களில் செய்தி உலா வந்தது. தற்போது ஒக்டோபர் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக செய்தி வௌியாகியுள்ளது. இவை போலியான செய்தியாகும்.
கொவிட் 19 பரவலையடுத்து கடந்த மார்ச் மாதம் 15ம் திகதி சவுதி அரேபியா சர்வதேச விமானசேவைகளை இடைநிறுத்தியது. விசேட தேவைகளுக்கு தவிர அங்கு சர்வதேச விமான சேவை இடம்பெறவில்லை எனவும் இடைநிறுத்தப்பட்டுள்ள சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லையென்று அவ்வாணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
மூலம் – கட்டார் தமிழ்