சவுதி அரேபியா மேற்கொண்டு தொழிற்சட்ட சீர்த்திருத்தங்கள் அந்நாட்டில் பணியாற்றும் வீட்டுப் பணிப்பெண்கள் போன்ற முறைசாரா தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொருந்தாது என உள்நாட்டு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் தொழில் வழங்குநர்களுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொண்டுள்ள இம்மாற்றங்களில் வீட்டுத் தொழிலாளர்கள், தோட்டவேலை செய்பவர்கள், மற்றும் வீட்டுக் காவலர்களாக பணியாற்றுபவர்கள் உள்வாங்கப்படவில்லை என்று அந்நாட்டு மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி சப்க் ஆன்லைன் செய்தித்தாள் செய்தி வௌியிட்டுள்ளது.
தனது நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தொழிற்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக நேற்றுமுன்தினம் (04) சவுதி அரேபியா அறிவித்திருந்தது. அத்திருத்தங்களுக்கு அமைவாக அந்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் தொழில் வழங்குநர்களின் அனுமதியின்றி பணியிடங்களை மாற்ற முடியும். அத்துடன் தொழில் வழங்குநர் ஒப்புதலின்றி நாட்டை விட்டு வௌியேறவும் மீள்நுழைவு வீசா பெறவும் முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
எதிர்வரும் 2021ம் ஆண்டு 14ம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த திருத்தத்தினூடாக அங்கு பணியாற்றும் அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களும் நன்மை பெறுவார்கள் என்றும் இதனூடாக ஊழியர் மற்றும் தொழில்வழங்குநர் என அனைவரினது உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்றும் ஆரம்பத்தில் அரசு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதி வெளியேறும் விசா சீர்திருத்தங்கள் வேலைவாய்ப்பு ஒப்பந்தம் முடிந்தபின் புலம்பெயர் தொழிலாளர் நாட்டை விட்டு வௌியேற அனுமதிக்கப்படும். இவ்வணுமதி மின்னணு முறையில் அறிவிக்கப்படும். தொழில் வழங்குநர்களின் அனுமதியின்றி ஒப்பந்த விதிகளை மீறும் பட்சத்தில் அதன் விளைவுகளை குறித்த நபரே பொறுப்பேற்க வேண்டும்.
சவுதி அரேபியாவின் மொத்த சனத்தொகை 34.8 மில்லியன்களாகும். இதில் 10.5 மில்லியன்கள் புலம்பெயர் தொழிலாளர்களாவர்.