C190ஐ பாராளுமன்றில் நிறைவேற்ற ஒன்றிணைவோம்!

உலக நாடுகளைப் ​போன்றே இலங்கையிலும் உற்பத்தித் துறையில் ஆண்களும் பெண்களும் பங்களிப்பு வழங்கி வருகின்றனர். ஒரு சில துறைகளில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் சில துறைகளில் ஆண்களை விடவும் அதிகமாக பெண்களும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இலங்கை சனத்தொகையில் 52 சதவீதம் பெண்களாவர். எனினும் பல பணியிடங்களில் பெண்கள் அதிகமாக துன்புறுத்தல்களுக்கும் சுரண்டல்களுக்கும் உள்ளாகி வருகின்றனர் என்பதை நாம் மறந்து விட முடியாது. பணியிடங்களில் பால்நிலை தொடர்பான துன்புறுத்தல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கு C190 ஐ பாராளுமன்றில் நிறைவேற்றுவதற்கு அழுத்தம் செலுத்துவது அவசியம் என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும்.

வழமைபோன்றே இவ்வருடமும் சர்வதேச மகளிர் தினம் கடந்து போன நிலையில், இம்முறை பல மகளிர் அமைப்புக்களும் தொழிற்சங்கங்களும் C190 ஐ இலங்கையில் நிறைவேற்ற அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் என்பதையே வலியுறுத்தி பல செயற்பாடுகளை முன்னெடுத்தன என்பதை நாம் காணக்கூடியதாக இருந்தது.

பணியிடங்களில் நிலவும் பால்நிலை தொடர்பான துன்புறுத்தல்களையும் வன்முறைகளையும் இல்லாதொழிப்பதற்கு 2019ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் C190 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பணியிடங்களில் பால்நிலை சார்பாக இடம்பெறும் துன்புறத்தல்களுக்கும் வன்முறைகளுக்கும் (GBV-H) எதிராக செயற்படுவதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும். பால்நிலை தொடர்பான வன்முறைகளும் துன்புறுத்தல்களும் எந்தவொரு பணியிடங்களிலும் இடம்பெறக்கூடும்.

பணியிடங்களில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கு C190 உறுதிப்படுத்துவோம்.

பணியுலகில் ஆண்கள், பெண்களுக்கு எதிரான பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிக்க சர்வதேச தொழிலாளர் அமையத்தின் C190 தீர்மானத்தை அங்கீகரிக்குமாறு நாம் அரசாங்கத்திடம் கோருகிறோம்.

ஜூன் 2019 இல், சர்வதேச தொழிலாளர் அமைப்பானது ஜூன் மாதம் 2019ம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில், பணியுலகில் வன்முறை, துன்புறுத்தல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்படிக்கையையும் பரிந்துரைகளையும் ஏற்றுக்கொண்டது. புதிய உடன்படிக்கையான C190யானது பணியிடங்களில் பாலின அடிப்படையிலான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வாக்களிப்பை வழங்க சிறந்ததொரு வாய்ப்பாகும்.

பணியுலகில் இணையம், பணியிடம், பயணத்தின்போது, ஓய்வெடுக்கும்போது, உணவருந்தும்போது, தனது சுகாதார தேவைகளை நிறைவேற்றும்போது அல்லது சமூக ஒன்றுகூடலின்போது என எந்த இடத்திலும் துன்புறுத்தல்களும் வன்முறைகளும் இடம்பெறக்கூடும்.

C190 ஏன் முக்கியம் வாய்ந்தது?

பணியலகில் துன்புறுத்தல்களையும் வன்முறைகளையும் பொறுத்துக்கொள்ள முடியாது
பணியுலகில் வன்முறை, துன்புறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை நோக்கமாகக் கொண்ட முதல் சர்வதேச தரநிலை இதுவாகும்
வன்முறை, துன்புறுத்தல்களற்ற பணியுலகில் பணியாற்ற அனைவருக்கும் உரிமையுண்டு என்பதை அது அங்கீகரிக்கிறது
மாநாட்டை அங்கீகரிப்பதானது தேசிய சட்டத்தில் திருத்தங்ளை மேற்கொள்வதனூடாக GBV-H எதிரான பாதுகாப்பை பலப்படுத்தும்

ஐநா தகவல்களுக்கமைய, உலகளவில் சுமார் 818 பெண்கள் வீடுகளில், சமூகத்தில் அல்லது பணியிடங்களில் பாலியல், உடல்ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர். இலங்கையில், தொழிலாளர் சமூகத்தில் 8.3 மில்லியன் பேர் உள்ளனர். அவர்களில் 34.6% மட்டுமே பெண்களாவர். பாலின அடிப்படையிலான வன்முறைகளும் துன்புறுத்தல்களும் பெரும்பாலும் தொழில்வருவாய், உற்பத்தித்திறன், விடுமுறை என்பவற்றுக்கு தாக்கம் செலுத்துகின்றது.

பாலின அடிப்படையிலான வன்முறைகள், துன்புறுத்தல்கள் குறித்த அடையாளப்படுத்துவதானது, இலங்கை பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அத்துடன், பேண்தகு அபிவிருத்தியையும் உறுதிப்படுத்தும்.

இவை குறித்து இலங்கை அரசாங்கமும் தனது கவனத்தை திருப்பியுள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 108 மற்றும் 106ம் அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட பரிந்துரைகளுக்கும் தீர்மானங்களுக்கும் அமைவாக உரிய நிபுணத்துவ அபிவிருத்தி மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன கடந்த பெப்ரவரி மாதம் 5ம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

  • 2019 ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட நிபந்தனைகளும் பரிந்துரைகளும்
  • நிபந்தனை 190 – பணியிடங்களில் துன்புறுத்தல்களையும் வன்முறைகளையும் இல்லாதொழிப்பதற்கானது
  • பரிந்துரை 206 – பணியிடங்களில் துன்புறுத்தல்களையும் வன்முறைகளையும் இல்லாதொழிக்கும் பரிந்துரை மற்றும் 2017ம் ஆண்டு நடத்தப்பட்ட 106வது அமர்வில் நிறைவேறப்பட்ட,
    பரிந்துரை 205 – அமைதி மற்றும் மறுசீரமைப்பிற்கான வேலைவாய்ப்பு மற்றும் மேம்பாட்டுக்கான பரிந்துரை.

அதற்கமைய, சர்வதேச தொழிலாளர் அமைப்பினூடாக நிறைவேற்றப்பட்ட மேற்கூறப்பட்ட நிபந்தனைகளும் பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு பாராளுமன்ற அனுமதியை பெற கிடைத்த வாய்ப்பான பணியுலக தொழிலாளர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். எனினும் இம்முயற்சி இத்துடன் நிறைவடையாது.

ஏற்கனவே, பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத்தேர்தலுக்கான அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், C190யின் அவசியத்தை அழுத்தம் திருத்தமாக சொல்வதற்கான அதிகாரியொருவர் தற்போது இல்லை. ஜனாதிபதிக்கு அழுத்தம் செலுத்தினாலும் எதிர்வரும் தேர்தல் நிறைவடைந்து பாராளுமன்றம் கூடும் வரையில் அதனை நிறைவேற்றிக்கொள்ள முடியாது. அதனால் குறித்த விடயம் தொடர்பில் எமது அறிவை விருத்தி செய்து, ஏனைய தொழிலாளர்களுக்கும் தௌிவுபடுத்தி நிபந்தனையை செயற்பாட்டுக்கு கொண்டுவருதற்கான முயற்சிக்கு தயார்படுத்தலாகும்.

அரசாங்கமானது C190க்கான அமைச்சரவை அனுமதியை பெறுவதற்கு முன்னரே எமது இணையதளங்களான வேலைத்தளம், வேலைத்தளம் மற்றும் சொலிடாரிட்டி சென்ரர் நிறுவனம் ஆகியன தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புக்களை தௌிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

பணியிடங்களில் துன்புறத்தல்களுக்கும் வன்முறைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான சர்வதேச நிபந்தனையை நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசுகளை வலியுறுத்துவதற்காக 16 நாட்கள் பிரசார நடவடிக்கைக்கு அமைவாக தௌிவுபடுத்தும் செயலமர்வு கடந்த டிசம்பர் மாதம் 12,13ம் திகதிகளில் மாலைதீவு தலைநகர் மாலேயில் இடம்பெற்றது. இச்செயலமர்வில் அந்நாட்டின் சுற்றுலா, சுகாதாரம், துறைமுகம், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

மாலைதீவு சுற்றுலா ஊழியர்கள் சங்கம், மாலைதீவு தொழிற்சங்க சம்மேளம் ஆகியன சொலிடாரிட்டி சென்ரர் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இதுதவிர, இலங்கையில், தோட்டத் தொழிலாளர்கள், தேசிய தொழிலாளர் சங்கம், சுதந்திர ஆசிரியர் சேவை சங்கம், அரச தாதியர் சங்கம் உட்பட ஆகியோரின் பங்களிப்புடன் அண்மையில் நடைபெற்றது.

இவ்வாறான செயலமர்வுகளை தொடர்ந்து தொழிற்சங்கங்கள் மத்தியில் செயற்படுத்துவதனூடாக பணியிடங்களில் இடம்பெறும் பால்நிலை சார்ந்த துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான C190 நிபந்தனையை பாராளுமன்றில் நிறைவேற்றுவதற்கான அழுத்தங்களை வழங்க முடியும் என்பதே எமது நம்பிக்கை.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435