வாடகை வாகன சேவைக் கட்டணத்திற்கான தேசிய கொள்கையொன்றை உருவாக்குமாறு கோரி பிக்மி pickme நிறுவன முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் நான்காவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என அகில இலங்கை வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் உரிமைகள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் சரித் அத்தனபொல தெரிவித்துள்ளார்.
pickme நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாடகை வாகனங்களுக்கான வாடகைக் கட்டணம் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
pickme மோட்டார் வாகனங்களுக்கு முதல் 2 கிலோ மீற்றருக்கு 140 ரூபாவும் இரண்டு கிலோமீற்றருக்கு பிறகு47 ரூபாவும் அறவிடவும், முச்சக்கர வண்டிகளில் முதல் கிலோ மீற்றருக்கு 47 ரூபாவும் அதன் பின்னர் ஒவ்வொரு கிலோ மீற்றருக்கும் 35 ரூபாவும் அறவிடப்பட்டது.
எனினும், சந்தையிலுள்ள போட்டித்தன்மை காரணமாக ஒன்றரை மாதத்திற்கு முன்னர் குறித்த தொகைகளை 10.00 ரூபாவால் pickme நிறுவனம் குறைத்துள்ளது.
இதனால், pickme நிறுவன சாரதிகளுக்கு மாத்திரமன்றி, குறித்த துறையில் பணியாற்றும் ஏனைய சாரதிகள், மற்றும் ஏனைய தேசிய நிறுவனங்கள் மற்றும் அந்நிறுவனத்துடன் இணையாது சுயாதீனமாக வாடகை வாகனங்களை ஓட்டும் சாரதிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் வாடகை வாகன சேவைக்கான கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான தேசிய கொள்கையொன்றின் அவசியத்தை அரசாங்கத்திற்கு வலியுறுத்துவதே தமது போராட்டத்தின் நோக்கம் என்றும் அத்தனபொல தெரிவித்தார்.
வாடகைக் கட்டண குறைப்பானது வாடிக்கையாளருக்கு நன்மைபயக்கும் என்று தெரிவித்தபோதிலும் அத்தொகையானது நிறுவனத்துக்கு வழங்கும் 15 வீத கொடுப்பனவில் குறைக்கப்படவில்லை. சாரதியின் பணத்திலேயே அத்தொகை குறைக்கப்படுகிறது. அதனால் வாடகை வாகனச் சாரதிகள் மேலும் மேலும் சுரண்டி இந்நிறுவனம் லாபம் சம்பாதிப்பது மட்டுமன்றி தற்போது நாட்டின் அனைத்து வாடகை வாகனத்துறையையுமே ஸ்தம்பிதமடையச் செய்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.