உலகத் தொழிலாளர் தினம்

உலக தொழிலாளர் தினம் இன்று (01) எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் உத்தியோகப்பூர்வமாக கொண்டாடப்படுகிறது. உத்தியோகப்பூர்வமற்ற முறையிலும் பல நாடுகளில் இத் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் வர்க்கத்தை நினைவு கூறும் தினமாகவும் கௌரவப்படுத்தும் தினமாகவும் காணப்படும் உலக தொழிலாளர் தினமானது, தொழிலாளர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் அநீதிகளுக்கு எதிராக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளர்கள் இணைந்து நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தை அடுத்து ஆரம்பமானது.

18ஆம் நூற்றாண்டில் இறுதியில் ஆ18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இதற்கு எதிரான குரல்கள் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் தொடங்கின. இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்ட சாசன இயக்கம் (Chartists) 6 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் 10 மணி நேர வேலை என்ற கோரிக்கை பிரதானமானதாக முன்வைக்கப்பட்டது.

1830 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் பிரான்சில் நெசவுத் தொழிலாளர்கள் தினமும் 15 மணி நேரம் உழைத்து வந்தனர். இதனை எதிர்த்து அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1834 இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற வாசகத்தை முன்வைத்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால், இது தோல்வியில் முடிந்தது. அவுஸ்திரேலியா விலுள்ள மெல் போர்னில் கட்டிடத் தொழிலாளர்கள் 1856 இல் முதன்முதலாக 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்தனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றனர்.

1896 ஏப்ரலில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறுபிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளர்களின் நிலைமை குறித்து விரிவாக ஆராய்ந்தார். மேலும், ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதாரப் போராட்டம் அரசியல் போராட்டமாக எழுச்சி கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது எனலாம்.

அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து, அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கம் 1886, மே 1 ஆம் நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இந்த இயக்கமே மே தினம் தோன்றக் காரணமாக இருந்தது எனலாம்.
1889 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் சோசலிசத் தொழிலாளர்களின் சர்வதேசத் தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது. 18 நாடுகளிலிருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேரப் போராட் டத்தை முன்னெடுத்துச் செல்வது என்று முடிவு செய்தனர்.

1890 மே 1 ஆம் நாள், அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட அறைகூவல் விடுக்கப்பட்டது. இந்த அறைகூவலே, மே முதல் நாள் சர்வதேச தொழிலாளர் தினமாக – மே தினமாக வருவதற்குக் காரணமாக அமைந்தது. அடுத்த ஆண்டிலிருந்து உலக நாடுகள் பலவற்றில் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.

தொழிலாளரை நினைவுகூறும் தினமாகவும் கௌரவிக்கும் தினமாகவும் மே முதலாம் திகதி பார்க்கப்பட்டாலும் இலங்கை போன்ற நாடுகளில் தற்போது அரசியல்வாதிகள் தமது பெயரை நிலைநாட்டிக்கொள்வதற்காக பயன்படுத்து ஒரு மேடையாகவே மாறி வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

வருடத்தில் ஏனைய நாட்களில் கவனிக்கப்படாத விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் போன்றோரை மே தினத்தில் மட்டும் விசேடமாக அழைக்கப்பட்டு ஒரு நேர உணவு, குடிநீர், ஒரு தொப்பி போன்றவற்றை வழங்கி வாய் கிழிய பேசும் அரசியல்வாதிகளுக்கு ஏனைய நாட்களில் அத்தொழிலாளர்கள் பற்றிய ஞாபகம் ஏன் வருவதில்லை என்பது கேள்விக்குறிதான்.

எது எவ்வாறிருப்பினும் தொழிலாளர் தினமான இன்று உலகில் வாழும் அனைத்து தொழிலாளர்களும் சுபீட்சத்துடன் வாழவேண்டும் என்பதே அனைவரினது விருப்பமாகும்.

ஆர்த்தி பாக்கியநாதன்

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435