தென் கொரிய அரசாங்கத்தின் வேலை வாய்ப்புக்களுக்கான பரீட்சைக்குத் தோற்றி தேர்ச்சி பெற்றவர்கள் கொவிட் 19 காரணமாக அந்நாட்டுக்கு செல்வது தாமதமடைந்ததால், அவர்கள் விரைவாக அங்கு செல்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற இந்த விசேட பேச்சுவார்த்தையில், கொரிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி கட்டம் கட்டமாக கொரிய வேலைவாய்ப்புகளுக்கு பணியாளர்களை அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுவதற்கும், பணியாளர்களை அனுப்புவதற்கு முன்பு அவசியம் மேற்கொள்ளப்படவேண்டிய பிசிஆர் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் தேவைகளை அரசாங்கத்தினால் மேற்கொள்வது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் அமைச்சரின் அறிவுறுத்தலின்படி கொரியாவில் இலங்கை தூதுவராலயம் இம்மாதம் 26ஆம் திகதி அந்நாட்டின் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் இது சம்பந்தமாக கலந்துரையாடவுள்ளது. இந்த கலந்துரையாடலின் மூலம் வேலைவாய்ப்புக்கு தெரிவுசெய்யப்பட்ட 5,438 இலங்கையர்களை வேலைவாய்ப்புக்காக அனுப்புவதை விரைவுபடுத்துவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எதிர்பார்க்கின்றது.
பரீட்சையில் சித்தியடைந்த 1111 பேருக்கு தற்போது விசா மற்றும் தேவையான ஆவணங்கள் கிடைத்துள்ளமையும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.