சவுதி அரேபியாவில் கடந்த நவம்பர் மாதம் உயிரிழந்த இலங்கைப் பெண்ணான நெல்கா தீபானி என்பவரின் சடலம் அடுத்த வாரம் நாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை வௌிநாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.
வீட்டுப்பணிப்பெண்ணாக சென்ற தீபானி மூன்று வருடங்களுக்கு முன்னர் மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவ்வாறு கடந்த மாதம் உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் சடலத்தை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு சுமார் 5 இலட்சம் ரூபாவை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வழங்கியதாக பணியக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் திகதி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்ற நெல்கா தீபானி, இரு வருட சேவைக்காலம் பூர்த்தியடைந்த பின்னர் நாடு திரும்பவிருந்த நிலையின் எஜமானரின் கோரிக்கைக்கமைய தொடர்ந்து ஒரு வருடம் அங்கே பணியாற்றியுள்ளார். அதன் பின்னரும் நாடு திரும்ப அனுமதிக்காத நிலையில் தொழில் வழங்குநருக்கு தெரியாமல் தப்பிச் செல்ல முயன்ற வேளை மூன்றாம் மாடியில் இருந்து கடந்த 2015 ஓகஸ்ட் பத்தாம் திகதியன்று விழுந்து கடுங்காயங்களுடன் சவுதி கிங் காலித் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூன்று வருடங்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 11ம் திகதி உயிரிழந்தார். அவருடைய சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர உதவுமாறு அவருடைய மகன் நவம்பர் மாதம் 14ம் திகதி கோரியிருந்த நிலையில் அதற்கான நடவடிக்கைகளை பணியகம் மேற்கொண்டது.
சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர 11700 சவுதி ரியால் (477,507.42 ரூபா) செலவாகும் என்று ஜெத்தா கொன்சல் காரியாலயம் தெரிவித்த நிலையில் அப்பணத்தை பணியகத்தின் ஊழியர் நலன்புரிய நிதியத்தில் இருந்த பெற்றுத்தருமாறு நீதி மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள வழங்கிய ஆலோசனைக்கமைய மேலதிக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது