தொழில் அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான புதிய சட்டதிட்டங்களை ஐக்கிய அரபு இராச்சியம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கமைய பணியாற்றும் நிறுவனத்தில் பணியாற்றுவோரின் முழுமைப்படுத்தப்படாத அனுமதிப்பத்திரங்களை பதிவு செய்தல் அல்லது பதிவை புதுப்பிப்பதில் தொழில் வழங்குநர் தாமதப்படுத்துவாராயின் ஒரு தொழிலாளரின் அட்டைக்கு ஆகக்கூடிய அபராதத் தொகை 2000 திர்ஹம் செலுத்தவேண்டும் என்று அந்நாட்டு மனித வளள மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு (MOHRE) அறிவித்துள்ளது.
அமைச்சுக்கு தொழில் ஒப்பந்தமொன்றை பெற்றுக்கொடுக்கும் போது தொழில் வழங்குநர்களுக்கு 60 நாட்கள் (பணியாளரின் அந்நாட்டுக்குள் பதிவை உறுதிப்படுத்திய நாள் தொடக்கம் 60 நாட்கள்) வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்படாவிடின் தொழில் வழங்குநர்கள் நாளொன்றுக்கு 100 திர்ஹம் தொடக்கம் 2000 திர்ஹம் வரை அபராதம் செலுத்தவேண்டியேற்படும்.
காலாவதியான நாள் தொடக்கம் 60 நாட்களுக்கு மேற்படாத கால எல்லைக்குள் தொழில் அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கப்படாவிடின் மாதமொன்றுக்கு 200 திர்ஹம் முதல் 2000 திர்ஹம் வரை அபராதம் செலுத்தப்படும். இதற்கு முன்னர் இத்தொகை மாதாந்தம் 500 திர்ஹம் செலுத்தப்படவேண்டியிருந்ததுடன் ஆகக்கூடிய தொகை அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.
குறித்த சட்டதிட்டம் தொடர்பில் அமைச்சின் மனிதவள ஒருங்கிணைப்பாளர் சபீப் அல் சுவாயிட் கருத்து தெரிவிக்கையில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து நிறுவனங்களுக்கு புதிய சட்டம் செல்லுபடியாகும் என்பதுடன் குறித்த சட்டத்தை பின்பற்றுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.