கஷ்டமோ சந்தோசமோ, வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் பிறந்த மண்ணில் இருக்கவே மனசு விரும்புகின்றது. வெளிநாடுகளில் தற்காலிகமாக வாழ்கின்றவர்கள் மற்றும் தொழில் புரிகின்றவர்கள் இதனை இன்னும் அதிகமாக உணர்வார்கள்.
அவ்வகையான, இலங்கைப் பணியாளர்களுள் ஒரு பிரிவினர் கொரோனா வைரஸ் நெருக்கடியின் காரணமாக இன்று சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாத இக்கட்டான நிலைக்கு ஆளாகி நிர்க்கதியாகி நிற்கின்றனர்.
உலகம் பெரும்பாலும், கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைகயும், வைரஸ் தொற்றுக்கு ஆளாகிய நபர்களின் தொகையையுமமே கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த வைரஸ் பரவலின் பின்னணி மற்றும் அது உலக பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் எதிர்விளைவுகள் பற்றியெல்லாம் பரந்தளவில் வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால், இலங்கை வெளிநாட்டு ‘பணவலுப்பல்கள்’ என்ற விடயத் தலைப்பின் கீழ் பெருமளவான அந்நியச் செலாவணியை பெற்றுத் தருகின்ற புலம்பெயர் தொழிலாளர்கள் இப்போது தொழிலும் இல்லாமல், நாட்டுக்கும் திரும்பவும் முடியாமல் படுகின்ற அவதியை நாம் பெரிதாக அலட்டிக் கொண்ட மாதிரி தெரியவில்லை. அவர்களோடும் அவர்களது குடும்பங்களோடும் தூதரகங்களோடும் இந்தக் கதை முடிந்து விடுகின்றது.
உலக நெருக்கடி
எத்தனையோ வளர்ச்சியடைந்த நாடுகள் கொவிட் வைரஸ் காரணமாக பெரும் உயிர் இழப்புக்களை சந்தித்துள்ளன. இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் இன்றும் கூட கொவிட் 19 இற்கு எதிராக கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஒரு சிறிய நாடாக இருந்த போதிலும், இலங்கையானது விரைவான தீர்மானங்கள் எடுத்து; கட்டுப்பாடுகளை விதித்ததன் மூலம் வெற்றிகரமான முறையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தியிருக்கின்றது.
இதேவேளை, பட்டய (வாடகை), விசேட விமானங்களின் மூலம் வெளிநாடுகளில் இருந்து அடிக்கடிஇலங்கையர் அழைத்து வரப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். இவர்கள் மத்தியில் இருந்து 2, 3 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக தினமும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்ற போதிலும் கூட, இலங்கையரை மீண்டும் அழைத்து வரும் நடவடிக்கையை அரசாங்கம் முற்றாக நிறுத்தவில்லை.
ஆயினும், வெளிநாடுகளில் அதிலும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் ஆயிரக்கணக்கான இலங்கை பணியாளர்கள் நாட்டுக்குத் திரும்ப முடியாத நிலையில் நிர்க்கதியாகியுள்ளனர். இது தொடர்பில் அங்கிருந்து எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ள செய்திகள் தகவல்கள், குரல்பதிவுகள் மிகவும் கவலையளிப்பதாக இருக்கின்றன.
முஸ்லிம்கள், தமிழர்கள், சிங்களவர்கள், கிறிஸ்தவர்கள் என்ற பாகுபாடு எதுவும் இன்றி கணிசமான இலங்கைப் பணியாளர்கள் கொரோனாவின் எதிர்விளைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதுபற்றி பெரிதாக பேசுவதற்கு யாருமில்லை. முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகள் புதிய பாராளுமன்றத்தின் இன்பங்களில் மூழ்கித் திளைத்திருப்பதாகவே தோன்றுகின்றது. இருப்பினும், இதுபற்றி நாம் பேச வேண்டியிருக்கின்றது.
கொவிட்-19 வைரஸ் பரவியதன் காரணமாக உலகமே பாதிக்கப்பட்டது. சுகாதாரம், அரசியல், பொருளாதாரம், சமூக வாழ்வு, கல்வி, வருமானம், ஸ்திரமான வாழ்க்கைநிலை என எல்லா பரப்புக்களிலும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் வாழ்கின்ற மனிதர்கள் இதன் பாதிப்பை எதிர்கொள்வதே விதி என்றாகியிருக்கின்றது. அதில் ஒரு பகுதியினரே இந்த வெளிநாட்டுப் பணியாளர்கள் எனலாம்.
இலங்கை பணியாளர்கள்
சில காலத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட தரவொன்றின் பிரகாரம், இலங்கையை தாயகமாகக் கொண்ட சுமார் 3 மில்லியன் பேர் வெளிநாடுகளி;ல் வசிக்கின்றனர். 10 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கைப் பணியாளர்களும்; இவர்களுள் அடங்குகின்றனர்.
இவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமன்றி ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க நாடுகளிலும் பணியாற்றுகின்றனர். கொவிட் வைரஸ் காரணமாக இவர்களுள் கணிசமானோர் பல்வேறு சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால், மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் கீழ்நிலை ஊழியர்களே இதனால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, ஒப்பீட்டளவில் இலங்கைக்கு திரும்புவதற்காக பகீரத பிரயத்தனங்களை எடுத்தும் அது கைகூடி வராத நிலையில் இன்று வரையும் அலைக்கழிகின்றவர்களும் மத்திய கிழககில் பணிபுரிகின்ற நம்மவரே என்று கூறலாம்.
மத்திய கிழக்கு நாடுகளிலேயே பெருமளவான இலங்கையர் பணியாற்றுகின்றனர். இவர்களால் இலங்கைக்கு பெருமளவு வெளிநாட்டு பணவனுப்பல்கள் ஒவ்வொரு மாதமும் கிடைக்கின்றன. இலங்கை அரச வருமானத்தில் மிக முக்கியமான ஒரு வகிபாகத்தை இது கொண்டிருக்கின்றது.
மறுபுறுத்தில், இவ்வாறு வெளிநாடுகளில் தொழில்புரிகின்ற இளைஞர்கள், குடும்பஸ்தர்களின் உழைப்பின் காரணமாகவே தாய்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினரின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கின்றது. ஆனால் கொரோனா எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது.
தொழிலும் இல்லை
சவூதி அரேபியா, கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் (துபாய்), குவைத், பஹ்ரைன், ஓமான் உள்ளிட்ட நாடுகளில் தொழில்புரிகின்ற பணியாளர்களில் சிலரது ஒப்பந்தக் காலம் முடிவடைந்துள்ளது. சிலரது சேவை ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சில கம்பனிகள் ஆட்குறைப்புச் செய்துள்ளன. அநேகமான நிறுவனங்கள் விஷேட கொடுப்பனவுகளை நிறுத்தியிருக்கின்றன. ஒரு சில கம்பனிகள் சம்பளத்தை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் வருமானம் இழந்திருப்பதுடன் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் தொழிலைக் கூட இழந்து தவிக்கின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்குள்ள கணிசமான கம்பனிகள் தங்களது நிறுவனத்தில் முக்கியமான பதவிகளில் இருக்கி;ன்ற பணியாளர்களுக்கு தொடர்ந்தும் சம்பளம் வழங்குகின்றன. சுகாதார பாதுகாப்பு, நலன்பேணல் சார்ந்த உதவிகளையும் செய்கின்றன. சில நிறுவனங்கள் மற்றும் முதலாளிமார் எந்தவித ஒப்பந்த செயற்றிட்டமோ வருமானமோ தங்களுக்கு இல்லாத சூழ்நிலையிலும் தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளமும் உணவும் வழங்கி வருகின்றனர் என்பதையும் இந்த இடத்தில் மறந்து விடக்கூடாது.
ஆயினும், மேற்குறிப்பிட்ட வகையான தொழிலாளர்களும் அதேபோன்று சேவைக்காலம் முடிவடைந்த நிலையில் உள்ளவர்கள், பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள், வெளியேறல் (எக்சிட்) விசா கொடுக்கப்பட்டவர்கள், நிறுவனங்களில் இருந்து வெளியில் பாய்ந்து தொழில் செய்தவர்கள், தனிப்பட்ட தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள், ஒப்பந்த விதிமுறைகளை மீறி வெளியில் உழைத்தவர்கள் மற்றும் குறைந்த சம்பளம் உழைக்கின்ற கீழ்மட்ட தொழிலாளர்கள் இந்த நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மறைக்க முடியாது.
தொழிலும் வருமானமும் இல்லாமையாலோ, விசா காலாவதியானதாலோ அல்லது அவசர தேவைக்காகவோ இவர்களுள் கணிசமானோர் இலங்கை வருவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்ற போதிலும் அது ‘கல்லில் நார் உரிக்கின்ற காரியமாக’ இருக்கின்றது.
இதனால், கையில் பணமும் இன்றி, நாட்டுக்கு செல்ல வழியும் இன்றி இலங்கைப் பணியாளர்கள் மத்திய கிழக்கின் தெருக்களில் அலைந்து திரிகின்றனர்.
பணமும் இல்லை
பல சவால்களையும் தாண்டி, இலங்கை அரசாங்கம் வெளிநாட்டில் நிர்க்கதியாகி இருக்கின்றவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு பல நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகின்றது. இதற்காக விஷேட மற்றும் பட்டய விமானங்கள் சேவைக்கு அமர்த்தப்படுகின்றன.
அவ்வாறு அழைத்து வரப்படுகின்றவர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அல்லது தனிமைப்படுத்தல் ஹோட்டல்களுக்கு அனுப்பப்படுகின்றனர். இதுவெல்லாம் பாராட்டுதலுக்குரியது மட்டுமன்றி நன்றிக்குரியதுமாகும். ஆனால் இதுவெல்லாம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெறுகின்றது.
கட்டுநாயக்க விமானநிலையம் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை. மத்திய கிழக்கின் அநேக நாடுகளுக்கு இன்னும் வர்த்தக விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவில்லை. எனவே மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவைகளே இடம்பெறுவதால் அதில் ஆசனம் (டிக்கட்) கிடைப்பதும், நாட்டுக்கு திரும்புவதும் பெரும்பாடாக இருக்கின்றது.
அத்துடன் கையில் காசு இல்லாமலும், தொழில் இல்லாமலும் இருக்கின்ற பெருமளவான இலங்கைப் பணியாளர்கள் அங்கிருக்கின்ற இலங்கைத் தூதரங்களிடமும் விமான சேவை நிறுவனத்திடமும் சேவையைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களும் வெளியாகியுள்ளன.
இவ்வாறு தொழிலும் இன்றி, கையில் பணமும் இன்றி நிர்க்கதியாகியுள்ள பல நூற்றுக்கணக்கான இலங்கைப் பணியாளர்கள் நண்பர்கள், உறவினர்களின் உதவியுடன் நாட்களைக் கடத்துகின்றனர். சிலர் உணவுச் செலவுக்கு கூட சிரமப்படுகின்றனர். பொதுவாக பலரும் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாக அங்கிருந்து தொடர்புகொண்ட ஒருவர் கூறினார்.
குறைந்த வருமானம் உழைத்தவர்கள், தொழிலை இழந்தவர்கள் இலங்கையிலுள்ள தமது குடும்பத்தினருக்கு பணம் அனுப்புவதை நிறுத்தும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. வெளிநாட்டுப் பணத்தை நம்பி இதுவரை காலமும் சற்று நிம்மதியாக வாழ்ந்து வந்த குடும்பத்தினர் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், ஒரு சமூகமாக இன்னும் நாம் இதுபற்றி கவனம் செலுத்தத் தொடங்கவில்லை.
விமான டிக்கட் ஒன்றின் கட்டணம் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் றியால்கள் வரை பன்மடங்கு அதிகரித்திருக்கின்ற சூழ்நிலையில், கையில் பணமிருப்பவர்களால் கூட விமானத்தில் இடம்பிடிப்பது பெரும்பாடாக ஆகியிருக்கின்றது. இந்நிலையில், குறைந்த வருமானம் உழைப்பவர்கள் நாட்டுக்கு வருவதற்கான டிக்கட் செலவுக்கு கூட பணமில்லாத நிலையில் நிர்க்கதியாகியுள்ளனர்.
குறிப்பாக, விமானத்தில் பயணிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தாலும், விமானப் பயணச் சீட்டுக்கும், இலங்கையில் ஹோட்டல் போன்ற சொகுசு தனிமைப்படு;த்தல் மையங்களில் தங்குவதற்கும் அதிக பணம் செலவிட வசதியுடையோருக்கே தாய்நாட்டுக்கு வரும் அதி;ர்ஷ்டம் கிடைப்பதற்கான நிகழ்தகவு காணப்படுகின்றமை கவலைக்குரியது.
இந்தப் பின்னணியிலேயே, உத்தியோகத்தர் ஒருவருக்கு கொவிட் -19 வைரஸ் தொற்று ஏற்பட்டதையடுத்து கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் இரு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதேபோன்றதொரு காரணத்திற்காக ஜித்தாவில் உள்ள கன்சுலேட் அலுவலகமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அவர்களது குமுறல்கள்
கட்டாரில் இருக்கின்ற நண்பர் ஒருவர் கூறுகையில், ‘இங்கு அவர்கள் படுகின்ற கஷ்டத்தை வர்த்தைகளால் விபரிக்க முடியாது. இங்குள்ள பல நிறுவனங்கள் இன்னும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குகின்றன,
அவர்களைக் கவனிக்கின்றன. ஆனால், சேவைக்காலம் முடிந்தவர்கள், வெளியேறல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள், அன்றாடத் தொழில் செய்பவர்கள் மற்றும் தொழில் இழந்தவர்கள் படும்பாடு சொல்லி மாளாது.
பலர் தமது குடும்பத்தினருக்கு பணம் அனுப்ப முடியாமல் திண்டாடுகின்றனர். அநேகர் தாம் தங்கியிருந்த அறைகளை, வீடுகளை விட்டு வெளியேறி நண்பர்களிடம் புகலிடம் கோரியுள்ளனர். ஒருசிலர் வீடுகளையும் வாகனத்தையும் விற்பனை செய்துள்ளனர். சிலருக்கு அன்றாடச் செலவுக்கே பணம் இல்லை. பலர் நண்பர்களின், உறவினர்களின் உதவியுடன் நாட்களை கடத்துகின்றனர்.
ஆனால், இலங்கைக்கு போவதற்கான விமானத்தில் இடம்பிடிக்க படாதபாடுபட வேண்டியிருக்கின்றது. விமான டிக்கட் கட்டணம் 4 ஆயிரம் றியாலை தாண்டி விட்டது. மாதம் 700 – 1500 றியால் உழைப்பவர்கள் இதனை எவ்வாறு சமாளிப்பார்கள்? அது ஒருபுறமிருக்க, தூதரகத்தையும் விமான சேவை நிறுவனத்தையும் தொலைபேசியில் தொடர்பு கொள்வது சிரமமாக உள்ளது. இதனால் பல நூறு கிலோமீற்றர் தொலைவில் இருந்து வருவதற்கும் அதிகம்; செலவழிக்க வேண்டியுள்ளது.
இந்த நிலைமைகளால் நாம் மிகவும் மனமுடைந்து போயுள்ளோம். சிலர் தற்கொலை செய்யும் நிலைக்குக் கூட சென்றிருக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நாடு கருணை காட்டுவதுடன், இலங்கை அரசாங்கமும் இது விடயத்தில் இன்னும் கூடுதலான கவனத்தை செலுத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கை’ என்றார்.
சவூதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் விபரிக்கையில், ‘கொரோனா நோய் நெருக்கடியை தொடர்ந்து, நாட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கவே செய்கின்றது. ஆனால், நிலைமைகள் சீரடையட்டும் என்று பலர் இருக்கின்றார்கள். ஆனால், கொரோனாவால் தொழில் இழந்தவர்கள், போதுமான வருமானத்தை பெற முடியாதவர்கள், வெளியேறுகை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள், நாளாந்தம் சுயதொழில் செய்பவர்கள் மற்றும் அவசரமாக நாட்டுக்கு செல்ல வேண்டியிருப்பவர்களால் அப்படி இருக்க முடியாது. எனவே அவர்கள் தொடர்ந்தும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இங்கிருந்து விசேட, பட்டய (வாடகைக்கமர்த்தப்பட்ட) விமானங்களே செல்கின்றன. அதற்கு முன்பதிவு செய்வதும் ஆசன ஒதுக்கீடு பெறுவதும் மிகச் சிரமமாக உள்ளது. தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்ட போதிலும், அநேக சந்தர்ப்பங்களில் விமான சேவை அலுவலகத்தையோ, தூதரகத்தையோ தொலைபேசி ஊடாக தொடர்புகொள்ளும் முயற்சி பயனளிக்காமையால், பல நூறு கிலோமீற்றருக்கு அப்பாலிருந்து பணம் செலவழித்து வருகின்றார்கள்.
இங்கு வந்து மேற்படி அலுவலகங்களுக்கு முன்னால் தவங்கிடக்கின்றார்கள். இரவில் வீதிகளிலும் நண்பர்களின் அறைகளிலும் தங்கியிருக்கின்றார்கள். கடைசியில் ஒரு ஆசனத்தை பெற வாய்ப்புக் கிடைத்தாலும் விமானப் பயணச் சீட்டுக் கட்டணங்கள் 4400 றியாலுக்கு அதிகமாக அறவிடப்படுகின்றன. குறைந்த வருமானம் உழைப்போரால் இந்த தொகையை வழங்க முடியாத நிலையும் ஏற்படுகின்றது’ என்று கூறினார்.
குவைத்தில் இருந்து ஒரு பணியாளர் தகவல் தருகையில், ‘இங்கு இலங்கைப் பணியாளர்கள் எல்லோரும் சிரமப்படுகின்றார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால் சாதாரண மற்றும் குறைந்த வருமானம் பெறுகின்ற தொழிலாளர்களும், வீட்டுப் பணி;ப்பெண்கள் மற்றும் நாளாந்த தொழில் செய்வோரும் வருமான இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இங்கு அன்றாடச் செலவுகளுக்கு கூட அவர்கள் அவதிப்படுவதை காண முடிகின்றது.
குறிப்பாக, தமது தொழில் ஒப்பந்த முதலாளியை (கபீல்) விட்டு விலகியவர்களும் சட்ட ரீதியற்ற முறையில் குவைத்தில் தங்கியிருந்தவர்களும் அதிகளவில் நிர்க்கத்தியாகியுள்ளனர். நாம் யாரையும், எந்த நாட்டையும் குற்றம் சொல்லிப் பயனில்லை. ஆனால், இந்த அவலம் எவ்வழியிலாவது முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்’ என்று தெரிவித்தார்.
உண்மையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வழக்கம் போல திறந்தால் நிலைமைகள் கட்டுப்பாட்டை மீறலாம் என்பதற்காகவே அரசாங்கம் இன்னும் திறக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆயினும் தங்களது வீடுகளுக்கும் எமது நாட்டுக்கும் உழைத்துத் தந்த வெளிநாடுகளிலுள்ள இலங்கைப் பணியாளர்களுள் ஒரு பிரிவினர் இன்று நிர்க்கதியாகியுள்ளனர்.
கையில் பணமும் இல்லை தொழிலும் இல்லை. நாட்டுக்கும் போக முடியாத நிலை. என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் அல்லல் படுகின்றனர். அவர்களது கதைகள் கண்கலங்க வைக்கின்றன.
எனவே, அரசாங்கம் இது விடயத்தில் மனிதாபிமான அடிப்படையில் கவனம் செலுத்த வேண்டும்.
தூதரகங்கள் நட்புறவான சேவை மேற்கொள்வதை உறுதிப்படுத்துவதுடன், நாட்டுக்கு வர விண்ணப்பித்தவர்களை அழைத்து வருவது உடனடியாக சாத்தியமில்லை என்றால், சம்பந்தப்பட்ட நாடுகளுடன் கலந்து பேசி, அங்கு நிர்க்கதியான பணியாளர்களுக்கு சலுகை மற்றும் விசேட நிவாரணங்களையாவது வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கமானால், அவர்களும் குடும்பத்தினரும் சற்று ஆறுதல் அடைவார்கள்.
மூலம் – ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி – 2020.09.27)