இத்தாலியில் தூதரக உதவிகளை எதிர்பார்க்கும் 10,000 இலங்கையர்கள்

இத்தாலி அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 2020 ஜூன் 1 முதல் ஜூலை 15 வரை அமுல்படுத்தப்படும் ‘சனடோரியா 2020’ சிறப்புப் பொது மன்னிப்பின் கீழ், வீசா நிலையை முறைப்படுத்துவதற்காக தூதரக உதவிகளை எதிர்பார்க்கும் 10,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தமது கடவுச்சீட்டுக்களுக்கு விண்ணப்பிப்பதனை விரைவுபடுத்துவதற்குத் தேவையான கொன்சியூலர் சேவைகளை இலங்கைச் சமூக உறுப்பினர்களுக்கு வழங்குவதன் மூலமாக ரோமிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் மிலானிலுள்ள உதவித் தூதரகம் ஆகியன வசதிகளை ஏற்பாடு செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கோவிட்-19 தொற்றுநோயின் தற்போதைய நிச்சயமற்ற நிலைமைகளுக்கு மத்தியில், பல ஆண்டுகளாக தொடரும் வலுவான இருதரப்பு உறவுகளின் பின்னணியில், ஒழுங்கற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இத்தாலியில் தமது வீசா நிலைமையை முறைப்படுத்துவதற்காக விண்ணப்பிப்பதற்கும், தொழில் நோக்கங்களுக்காக சட்டப்பூர்வமாக தங்குவதற்கு அனுமதிகளைப் பெறுவதற்குமான வழிவகைகளை வழங்கும் ‘இத்தாலியை மீளத் தொடங்குதல்’ அபிவிருத்தித் திட்டத்தின் முக்கியமான கொள்கைக் கூறுகளில் ஒன்றாக இத்தாலி அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சனடோரியாவினூடாக இத்தாலியிலுள்ள இலங்கைச் சமூக உறுப்பினர்கள் தங்கியிருப்பதை ஒழுங்குபடுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறப்புப் பொது மன்னிப்பின் கீழ் இலங்கையர்களுக்கு வசதிகளை மேற்கொள்வதற்கும் சேவைகளை வழங்குவதற்கும், தூதரகத்திற்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்ட 10 வேலை நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் தமது உண்மையான கடவுச்சீட்டுக்களை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கான சிறப்பான கொன்சியூலர் சேவைகளை ரோம் மற்றும் மிலானிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் தொடங்கியுள்ளன. கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் தூதரகங்களுக்கு வருகை தரும் பொதுமக்கள் சுகாதார நெறிமுறைகளுக்கு அமைவாக செயற்படுவதனை உறுதி செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்து, கொன்சியூலர் சேவைகளுக்கு வருகை தரும் விண்ணப்பதாரர்கள் இணையவழி அடிப்படையிலான சந்திப்பு முறையின் மூலமாக அழைக்கப்படுகின்றார்கள்.

மேலும், சனடோரியாவின் கீழ் தமது வீசா நிலைமையை முறைப்படுத்துவதற்காக கடவுச்சீட்டுக்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் சிசிலி தீவிலுள்ள இலங்கையர்களுக்கான சிறப்பானதொரு இணையவழி மூலமான நடமாடும் சேவையை ரோம் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது. சிறப்பு இணையவழி மூலமான நடமாடும் சேவையின் செயற்பாட்டில் ஆவணங்களை ஆராய்தல் மற்றும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்தல் போன்ற செயற்பாடுகள் வீடியோ மாநாடு மற்றும் மின்னணு அஞ்சல் முறைமை மூலமாக முன்னெடுக்கப்படும். சிறப்பு இணையவழி நடமாடும் சேவையானது 2020 ஜூன் 14ஆந் திகதி காலை 9.00 மணி முதல் சிசிலி தீவின் கட்டனியாவில் ஆரம்பமாகும்.

பொது மன்னிப்புக் காலத்தில் தமது ஒழுங்குபடுத்தல் செயன்முறைகளை முறையாக மேற்கொள்வதற்காக அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் உண்மையான கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படுவதனை உறுதிப்படுத்துவதற்காக, இந்த சிறப்பு கொன்சியூலர் சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களுக்கான விண்ணப்பங்களை 2020 ஜூன் 30ஆந் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்வதற்கு தூதரகம் திட்டமிட்டுள்ளது.

இலங்கைத் தூதரகம்

ரோம்

14 ஜூன் 2020

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435