
குவைத்தில் சட்டவிரோதான முறையில் தங்கி இருக்கும் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு, அந்நாட்டு உள்துறை அமைச்சினால் பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, நாளை (29) தொடக்கம் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி வரை குறித்த பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில், குவைத் நாட்டில் வதிவிட அனுமதி இல்லாதவர்கள், காலாவதியான வதிவிட அனுமதி உள்ளவர்கள், தங்கள் நிலையை சரிசெய்யவும், அல்லது நாட்டை விட்டு வெளியேறவும் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 15,447 இலங்கையர்கள் தமது வதிவிட பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கோ, அல்லது நாட்டை விட்டு வெளியேறுவதற்கோ இது அரிய வாய்ப்பாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும், அதாவது 2011 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தின்போது, 739 ,இலங்கையர்கள் தங்களுடைய வதிவிட நிலையை மீளமைத்ததுடன், 2,862 இலங்கையர்கள் குவைத்திலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்த காலப்பகுதியில் குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் உள்ளிட்ட ஏனைய நாட்டுப் பிரஜைகள் அபராதம் எதுவும் இன்றி நாடு திரும்ப முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு நாட்டை விட்டு செல்லும் வெளிநாட்டுப் பிரஜைகள் மீளவும் சட்ட ரீதியாக குவைத்திற்குள் பிரவேசிக்க சந்தர்ப்பமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சட்டவிரோதமாக குவைத்தில் வசிக்கும் இலங்கை மக்களிடம் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
இதில், அவர்களுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்துக்குள் மீண்டும் இலங்கைக்கு திருப்பிச் செல்ல வேண்டியவர்களை தொடர்புகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை கிழுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி இலக்கம் – 00 965 65000118