ஊழியர்களுக்கு சரியான முறையில் உரிய நேரத்தில் சம்பளம் வழங்காத தொழில் தருநர்களுக்கு எதிராக அபராதம் விதித்தல் அல்லது நிறுவனத்தை தடை செய்வதற்கான புதிய சட்டமொன்றை ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.
புதிய சட்டத்திற்கமைவாக சம்பளம் வழங்கவேண்டிய தினத்திலிருந் 10 நாட்களுக்குள் சம்பளம் வழங்கப்படாவிடின் சம்பளத்திற்கு மேலதிகமாக 5000 திர்ஹம் அபராதமாக சம்பளத்துடன் இணைந்து வழங்கப்பட வேண்டும். இதேவேளை அபராதம் விதிக்கபட்டு 15 நாட்களுக்குள் புதிய ஊழியர்களை குறித்த நிறுவனத்தில் இணைத்துக்கொள்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, 30 நாட்கள் சம்பளம் கொடுக்க தாமதமாகும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட ஊழியருக்கு சம்பளத்திற்கு மேலதிகமாக 50, 000 திர்ஹம் அபராதமாக விதிக்கப்படும் என்று ஐக்கிய அரபு இராச்சிய அரேபிய மனித வழு தெரிவித்துள்ளது.
நூறு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையான ஊழியர்கள் இருக்கும் நிறுவனங்களுக்கே இப்புதிய சட்டம் செல்லுபடியாகும்.
இரண்டு மாதங்கள் சம்பளம் வழங்க தாமதிக்கப்படுமாயின் விதிக்கப்பட்டுள்ள அனைத்து அபராதங்களையும் ஊழியருக்கு தொழில் தருநர் வழங்க வேண்டும் என்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆய்வு பிரதிச் செயலாளர் மஹேர் அல் ஒபேட் தெரிவித்துள்ளார்.
சம்பளம் உரிய நேரத்தில் வழங்காத காரணத்தினால் எந்தவகையிலாவது நிறுவனமொன்று தடை செய்யப்படுமாயின் நீதிமன்ற அனுமதியுடன் புதிய ஆளனி அனுமதிப்பத்திரம் பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டம் தொடர்பில் நிறுவன உயரதிகாரிகள் தெளிவு பெற்றிருப்பதுடன் ஊழியர்களும் இது தொடர்பில் அறிந்திருப்பது அவசியம் என்று சட்டப் பணிப்பாளர் பாகேய் அல் மசார் தெரிவித்துள்ளார்.
வேலைத்தளம்