ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான பனி காரணமாக போக்குவரத்தில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடர்ச்சியாக சில தினங்களுக்கு இந்நிலை தொடரும் சாத்தியம் காணப்படுகின்றமையினால் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் கவனமாக தமது பணியை முன்னெடுக்குமாறு அந்நாட்டு வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக அமீரகத்தை கடந்து பயணிக்கும் சுமார் 300 விமானங்கள் தாமதமாக பயணமாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிகாலை 3.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 மணிவரையான காலப்பகுதியில் டுபாய், அபுதாபி மற்றும் சார்ஜா ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் இருந்து வேறு நாடுகளுக்கு செல்லவிருந்த விமானங்களே தாமதமாகியுள்ளன.
ஆகாய மார்க்கம் மட்டுமன்றி தரை மார்க்கமாகவும் பயணம் செல்வதற்கு இக்கால நிலை தடையாகவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய அரபு இராச்சிய வானிலை அவதான நிலையம், குறிப்பாக டுபாய் பிரதான அதிவேக வீதியில் அதிக பனிமூட்டம் காரணமாக வாடகை வாகன ஓட்டுநர்கள் மற்றும் தனியார் வண்டிச் சாரதிகள் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர் என்றும் இந்நிலை இன்னும் சில தினங்களுக்கு தொடருமென்பதால் வீதியில் பயணிப்போர் அவதானத்துடன் இருக்குமாறும் காலநிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.