கட்டார் அரச துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் சம்பளத்தை 30% குறைக்க கத்தார் நிதியமைச்சு நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டார், அரசாங்கத்தின் அனைத்து திணைக்களங்களும் சம்பளக் குறைப்பிற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்கும் படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது பற்றி மேலும் தெரியவருவதாக, கட்டார் அரச துறை அனைத்து நிறுவனங்களுக்கும் நிதியமைச்சு முக்கிய அறிவித்தல் ஒன்றை சுற்று நிரூபத்தின் மூலம் விடுத்துள்ளது. அதன்படி ஜுன் மாதம் 1ம் திகதி முதல் அரச துறை நிறுவனங்களில் பணி புரியும் கட்டார் பிரஜைகள் அல்லாதவர்களுக்கான சம்பளங்களில் 30 வீதத்தை குறைக்க உத்தவிட்டுள்ளது. அல்லது அவர்களை இரண்டு மாதங்கள் அறிவிப்பு காலம் வழங்கி அவர்களை பணி நீக்கம் செய்யும் படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள முடக்கம் காரணமாக கட்டாரின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே இதற்குக் காரணம் என்பதாக அல் ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது. 2022ம் ஆண்டு கால்பந்து உலகக் கிண்ணத்தை கட்டார் நடத்தவுள்ள நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் ஏற்பட்டுள்ளது. எனவேதான் இந்த 30 சதவீத சம்பள குறைப்பு நடவடிக்கையின் கட்டார் இறங்கியுள்ளது.
கட்டாரில் மட்டுமல்ல ஓமான், மற்றும் அமீரகம் போன்றவை ஏற்கனவே அரசதுறை வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான சம்பள குறைப்பை அமுல்படுத்தியுள்ளன. என்றாலும் வெளிநாட்டுப் பணியார்களின் சம்பள குறைப்பு அல்லது அவர்களை பணி நீக்கம் செய்வது கட்டாரின் எதிர்கால செயற்றிட்டங்களை வெற்றிமாக நிறைவேற்றிக் கொள்வதில் சவால்மிக்கதாக அமையும் என்பதாகவும் Bloombergயின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம் : Qatartamil