குவைத்தில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருக்கும் சுமார் 75,000 பேரை கைது செய்வதற்கான பாதுகாப்புத்துறையின் சோதனை விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குவைத் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் குடியிருப்பு விதி மீறல்கள் செய்தவர்களை கைது செய்யும் வகையில் இதுவரை இல்லாத வகையில் பாதுகாப்பு சோதனைகளை தொடங்குவதற்கான திட்டத்தை வகுத்துள்ளனர்.
கடந்த ஏப்ரலில் குவைத் அரசாங்கம் வழங்கிய பொதுமன்னிப்பு காலத்தை உரிய முறையில் பயன்படுத்தாமல் சுமார் 75,000 பேர் சட்டத்திற்கு புறம்பாக குவைத்தில் தங்கி உள்ளனர் என அந்நாட்டு அரசாங்கம் கண்டறிந்துள்ளது.
குவைத் விமான போக்குவரத்து ஆரம்பிக்கப்பட உடனேயே பாதுகாப்பு சோதனைகள் தொடங்கப்படும். சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். சுகாதார நிலைமைகளை கருத்தில் கொண்டும், நாடுகடத்தல் மையங்களில் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக, கைது செய்யப்படுபவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என்று அந்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
புள்ளிவிவரங்களின்படி, ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு திட்டத்தை 26,000 பேர் மட்டுமே பயன்படுத்தினர், அதில் சட்டத்திற்கு புறம்பாக குவைத்தில் தங்கி இருந்தவர்களை குவைத் அரசாங்கம் தனது சொந்த செலவில் தங்கள் நாட்டுக்கு அனுப்பும் முயற்சியை மேற்கொண்டது.
பொது மன்னிப்பைப் பயன்படுத்தத் தவறிய குவைத்தில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருக்கும் குடியிருப்பாளர்களை கைது செய்து உடனடியாக நாடு கடத்த அதிகாரிகள் புதிய வழிமுறைகள் திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி- குவைத் சோஷியல் மீடியா