எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், இலங்கையில் இருந்து சவுதி அரேபியாவின் ஜெடாவுக்கான விமான சேவைகளை இரத்து செய்ய உள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான சேவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் சிவில் விமான சேவை அதிகார சபையால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவிற்கு அமைய இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் சவுதி அரேபியாவிற்குள் எந்தவொரு வெளிநாட்டவரும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், சவுதியின் ரியாத் மற்றும் தமாம் வரையான விமான சேவைகள் தொடர்ந்து இடம்பெறும் என ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.
இதேவேளை, சீனாவிற்கான அனைத்து விமான சேவைகளையும் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.
நிலைமையை கருத்திற்கொண்டு ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு பின்னர், சீனாவின் பீஜிங், குவேன்சு மற்றும் சங்ஹாய் வரையான விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு அவதானம் செலுத்தப்படும் என ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.