தொழில் வழங்குநர்களால் துன்பம் அனுபவிக்கும் வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் சாரதிகள் தமக்கு பாதுகாப்பான இடத்தில் புதிய தொழில்வாய்ப்புக்களை பெறும் வகையிலான வசதிகளை சவுதி அரசு வழங்கியுள்ளது.
தொழிற்சந்தை நிலவரத்தை ஒழுங்குப்படுத்தல், வீட்டுப்பணியாளர்களின் வசதி என்பவற்றைக் கருத்திற்கொண்டே இவ்வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொழில் மற்றும் சமுக அமைச்சர் இவ்வசதிக்கான அனுமதியை வழங்கியுள்ளது என்று அமைச்சு வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்நாட்டு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இப்புதிய நடவடிக்கையின் படி 13 நிலைமைகளின் கீழ் பணியாளர்கள் வேறிடங்களில் தொழில்வாய்ப்பினை தேடிக்கொள்வதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, தொழில் வழங்குநர் மூன்று மாதங்களுக்கு மேலாக சம்பளம் வழங்காதிருத்தல், தங்குமிட வீசா வழங்குதல் அல்லது புதுப்பித்தலில் 30 நாட்களுக்கு மேல் தாமதமாதல், வீட்டுப் பணியாளருக்குத் தெரியாமல் அவருடைய சேவையை வேறொருவர் பெறச் செய்தல், பணியாளரின் உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான வேலைகளை செய்யுமாறு வற்புறுத்தல் உட்பட மேலும் பல விடயங்களை சுட்டிக்காட்டி புதிய இடங்களில் தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட நபரை புதிதாக வேலைக்கு இணைத்துக்கொள்ளும் தொழில்வழங்குநர் 15 நாட்கள் பயிற்சி காலமாக வழங்குவது கட்டாயம் என்பதுடன் அக்காலப்பகுதிக்கான சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.