சான்றிழ்களுடன் பயிற்றப்பட்டவர்களுக்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துக- ஜனாதிபதி

சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தகைமை சான்றிதழ்கள் உள்ள பயிற்றப்பட்ட ஊழியர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் ஈடுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தை துரிதமாகவும் முறையாகவும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன் மூலம் நாட்டுக்கும் ஊழியர்களுக்கும் அதிக நன்மைகளை பெற்றுக்கொள்ள முடிவதுடன், தொழில் பாதுகாப்பையும் உறுதிசெய்ய முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைத்துவ இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் குறித்து நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

பயிற்றப்பட்ட ஊழியர்களுக்கு உலக தொழில் சந்தையில் அதிக கேள்வி உள்ளது. கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளின் தொழிற் சந்தைகளை இலக்காகக் கொண்டு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் தேவையை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபை இணைந்து இதனை திட்டமிடுமாறும் பணிப்புரை விடுத்தார். போலாந்து, ரூமேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தொழிற் சந்தைகள் தற்போது இலங்கைக்கு திறந்துள்ளது. அதற்கு ஏற்ற வகையில் ஊழியர் படையொன்றை உருவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பட்டதாரிகளுக்கு உள்ள வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி இது வரையில் அது குறித்து உரிய கவனம் செலுத்தப்படவில்லை. கலை பட்டதாரிகளுக்கும் இந்த சந்தர்ப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.

தொழில்வாய்ப்புக்காக புலம்பெயர்வது இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிப்பதுடன், இலங்கையின் மொத்த புலம்பெயர் ஊழியர்கள் 1.2 மில்லியன் பேராகும். வருடாந்தம் சுமார் இரண்டு லட்சம் பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக செல்வதோடு, கொவிட் நோய்த்தொற்று காரணமாக இவ்வருடம் அத்தொகை 40000க்கு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. கொவிட் 19 நோய்த்தொற்றுக்கு வெற்றிகரமாக முகம்கொடுத்து வெளிநாட்டு விமான நிலையங்கள் திறக்கப்பட்டதும் பயிற்றப்பட்ட ஊழியர்களை அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக இக்காலப்பகுதியில் அவர்களுக்கு மொழி அறிவு மற்றும் பயிற்சிகளை விரிவுபடுத்தி வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு தேவையான பயிற்றப்பட்ட ஊழியர் குழாமொன்றை உருவாக்குவதற்காக தற்போது 17 பயிற்சி நிலையங்களில் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

தொழில் ஒப்பந்தங்கள் நிறைவுபெற்றாலும் கொவிட் 19 காரணமாக தமது நாடுகளுக்கு திரும்ப முடியாமல் உள்ள ஊழியர்களின் தொழில் ஒப்பந்தங்களை நீடிப்பதற்காக குறித்த நிறுவனங்கள் மற்றும் துறைகளுடன் கலந்துரையாடுவது அவசியம் என்று தெரிவித்தார்.

ஊழியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஊழியர்களுக்கு வெளிநாடுகளில் ஏற்படும் அசௌகரியங்களின் போது இந்த நிறுவனங்களின் தலையீடு போதுமானதாக இல்லை என குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். ஊழியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் முக்கிய எதிர்பார்ப்பு அந்நியச் செலாவணியை சம்பாதிப்பதன்றி அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435