சிறுநீரகத்தை வழங்குமாறு நிர்பந்திக்கப்பட்டு சவூதி அரேபியாவில் மூன்று பிள்ளைகளின் தயாரான இலங்கை பணிப்பெண் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
தம்புள்ளை – கண்டலம பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தயாரான 36 வயதுடைய டபிள்யு.டபிள்யு.இந்திரகாந்தி என்ற பெண்ணே சவூதி அரேபியாவில் இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சவூதி அரேபியாவுக்கு பணிக்காக சென்றுள்ளார்.
இந்த நிலையில், சவூதி அரேபியாவில் உள்ள தமது தொழில் தருநரால் சிறுநீரகத்தை வழங்குமாறு தாம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக அவர் கண்ணீருடன் கூறியுள்ளார்.
அவர் தமது வீட்டாருடன் தொடர்புகொண்டு பேசுகையில்,
‘எனது பணிக்காலம் முடிவடைந்துவிட்டது. எனினும், என்னை (இலங்கைக்கு) அனுப்புகிறார்கள் இல்லை. மூன்று மாதங்களுக்கான சம்பளம் வழங்கப்படவுமில்லை. அதையும் வழங்குகிறார்களில்லை.
‘அவர்கள் எனது சிறுநீரகத்தை கேட்கின்றனர். அதற்காக 50 ஆயிரம் ரியால் தருகின்றோம் என்றனர். வழங்க முடியாது என நான் கூறினேன். எனினும், நன்றாக சிந்தித்து முடிவொன்றை சொல்லுமாறு அவர்கள் கூறுகின்றனர். என்னால் அவ்வாறு செய்ய முடியாது என்று நான் கூறினேன்.
‘ஆனாலும், சிறுநீரகத்தை தமக்கு வழற்குமாறு தொடர்ந்து கூறுகின்றனர். அத்துடன், அங்கு ஒருவரை திருமணம் செய்து வைப்பதாகவும், அங்கேயே வாழுமாறும் அவர்கள் என்னிடம் கூறுகின்றனர்.
‘என்னால் அது முடியாது. இலங்கையில் எனக்கு பிள்ளைகள் இருக்கின்றனர். இலங்கைக்கு நான் செல்லவேண்டும். எனது மூன்று பிள்ளைகளும் துன்பத்தில் இருக்கின்றனர்.’ என சவூதியில் தடுத்த வைக்கப்பட்டுள்ள அந்தப் பெண் கண்ணீருடன் கூறியுள்ளார்.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பாக, சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூலமாக இந்த விடயம் தொடர்பாக விசாரணைப் பணிகள் ஆரம்பிக்ககப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இன்னும் சில தினங்களில் குறித்த பெண்ணை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.