கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாமல் ஜப்பான் மற்றும் மியன்மாரில் சிக்கியிருந்த 309 இலங்கையர்கள் இன்று நாடுதிரும்பினர்.
ஜப்பானில் சிக்கியிருந்த 235 இலங்கையர்கள், ஜப்பானின் நரிடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து நாடு திரும்பியுள்ளனர்.
இலங்கை விமான சேவையின் விசேட விமானத்தினூடாக அவர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்.
நாடு திரும்பியவர்களுக்கு இலங்கை விமானப்படை அதிகாரிகளால் கிருமித்தொற்று நீக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மியன்மாரில் இருந்து மேலும் 74 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்.
மியன்மாரின் யங்கூன் விமான நிலையத்தில் இருந்து அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட இலங்கையர்கள் மற்றும் அவர்களின் பயணப்பொதிகள் விமானப்படையினரால் தொற்று நீக்கப்பட்டன.
இதன் பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.