கொவிட் 19 பரவல் காரணமாக தொழில் இழந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தொழில்வாய்ப்பை பெற்று தர மற்றும் நிவாரணம் வழங்க உதவுமாறு சர்வதேச தொழிலாளர் அமைப்பிடம் தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா வேண்டுகோள்விடுத்துள்ளார்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி சிம்ரித் சிங்குடனான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றபோது அமைச்சர் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார்.
தொழில் அமைச்சில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வௌிநாடுகளில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்த அமைச்சர் விதிவிட பிரதிநிதிக்கு விளக்கமளித்தார். பாதுகாப்பு, உரிய சம்பளம் பெற்றுக்கொள்ளல், விசா பெற்றுக்கொள்ளல் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் இக்கலந்துரையாடலில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், தொழில்வாய்ப்பை பெறுவதற்கு பெரும் தொகையான நிதியை செலவிட நிர்ப்பந்திக்கப்படுகின்றமை வௌிநாட்டு தொழில்வாய்ப்பை எதிர்பார்ப்போர் எதிர்நோக்கும் பெரும் பிரச்சினை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வௌிநாட்டு முகவர்கள் பெருந்தொகை பணம் அறவிடுவதனால் அதற்கான பணத்தையும் இந்நாட்டு முகவர்கள் தொழில்வாய்ப்பை எதிர்பார்ப்போரிடமே அறிவிட வேண்டியுள்ளது என முகவர்களை சந்தித்து உரையாடியபோது தெரிவித்தனர். எனவே வௌிநாட்டு முகவர்கள் அதிக தொகை பணம் அறவிடுவததை தடுப்பதற்கும், இலகுவில் விசா பெற்றுக்கொள்வதற்கும் உலக தொழிலாளர் அமைப்பு தலையீடு செய்வதை தாம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வதிவிட பிரதிநிதியிடம் தெரிவித்தார்.
இலங்கையின் தொழில் சட்டங்களை சர்வதேச மாற்றங்களுக்கு அமைவாக திருத்தங்களை மேற்கொள்ள ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதற்கும் தொழிலாளர் மற்றும் தொழில்வழங்குநர்களுக்கு இடையில் நல்லுறவை கட்டியெழுப்புவதற்கும் தொழில் அமைச்சு மற்றும் அரச நடவடிக்கை எடுப்பதாகவும் இதன்போது அமைச்சர் தெரிவித்தார்.