கொவிட் 19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்தால் தவிரநாடு திரும்புவது குறித்து மீள சிந்தித்து பார்க்குமாறு புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களிடம் வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆர்யசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பிரச்சினை காரணமாக சுமார் 38,000 இலங்கையர்கள் இலங்கை திரும்ப எதிர்பார்த்துள்ளனர். அவர்களில் 28,000 பேர் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவர்.
இலங்கைக்கு மீண்டும் திரும்புவது குறித்த தீர்மானத்தை எடுக்கும் முன்னர், அதனால் தொழில் மற்றும் கல்விக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய்ந்து பாருங்கள் என நான் புலம்பெயர் தொழிலாளர்கள், வௌிநாடுகளில் கற்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் கோருகிறேன். பாதிக்கப்பட்ட மற்றும் பிற நாடுகளில் சட்டரீதியாக தங்கியிருக்கக்கூடிய ஆவணங்கள் அற்றவர்களை மீள அழைத்து வருவது குறித்தே அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. ஏனெனில் அவர்களுக்கு இத்தகைய சந்தர்ப்பத்தில் அவசியமான சுகாதார வசதிகள் மற்றும் சலுகைகள் கிடைக்காது கஷ்டப்படுகின்றனர்.
அதேபோல், பிறநாடுகளில் தொழிலில் இருந்து நீக்கப்பட்ட பலர் இருப்பதால் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். அவர்களை நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பின்னரே நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள மற்றும் கொரோனா பாதிப்பிலிருந்து தப்ப நினைத்து விடுமுறை வர எதிர்பார்த்துள்ளவர்கள் குறித்து கவனம் செலுத்தப்படும்.
எனவே, வௌிநாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் மற்றும் மாணவர்கள் தொழில் அல்லது கல்வியை இழக்க நேரிடுதல் மற்றும் தாமதமாதல் குறித்து மீள ஆராய்ந்து பார்ப்பது சிறந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.