ஐக்கிய அரபு இராச்சியத்தில் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக பணியில் அமர்த்தப்படுபவர்கள் ஒப்பீட்டளவில் 15 – 20 வீதம் வரை குறைந்த சம்பளத்தில் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகள் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்ததுடன் பொருளாதார நடவடிக்கைகளை முற்றாக நிறுத்தி வைத்திருந்தன. தற்போது வழமைக்கு திரும்பும் நிலையில் புதிதாக பணியில் இணைத்துக்கொள்ளப்படுவர்களுடைய சம்பளம் முந்தைய சம்பளத்துடன் ஒப்பிடுகையில் 15 முதல் 20 வீதம் வரை குறைவாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அது மட்டுமன்றி, நிறுவனங்களின் செலவைக் குறைக்கும் நோக்கில் தற்காலிக ஊதியக்குறைப்பு மற்றும் 4 நாள் வேலையும் வழங்க நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் கொவிட் 19 காரணமாக தொழில் இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் நாடு திரும்புவதை விடவும் குறைந்த சம்பளத்தில் புதிய வேலையைத் தேடிக்கொண்டு ஐக்கிய அரபு இராச்சியில் தொடர்ந்து இருக்க விரும்புகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.