2021 ஆம் ஆண்டளவில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோர் தொழில் இழக்கலாம் என அனுமானிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் இழப்போரும் இதில் உள்ளடங்கும் பட்சத்தில் தொழில் இழந்தவர்களின் நிலைமை அபாயகரமான நிலைக்கு தள்ளப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம், கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் கடந்த 16 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
அதில் மத்திய கிழக்கு தொழிலாளர்கள் தொடர்பாக மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
மத்திய கிழக்கு நாடுகளின் பல்லாயிரக் கணக்கான தொழில்கள் இழக்கப்பட்டு வருகின்றன.
சுருக்கமாகக் கூறுவதானால் முழு நாட்டினதும் பொருளாதாரம் அபாயகரமான நிலைக்கு இழுத்துச் செல்லப்படுகிறது. இந்த சகலவற்றினதும் பெறுபேறாக வாழ்க்கைச் செலவு தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வறுமை வாட்டுகிறது.
தனிநபர் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டளவில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோர் தொழில் இழக்கலாம் என அனுமானிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் இழப்போரும் இதில் உள்ளடங்கும் பட்சத்தில் தொழில் இழந்தவர்களின் நிலைமை அபாயகரமான நிலைக்கு தள்ளப்படும்.
வெளிநாட்டு அந்நிய செலாவணி படிப்படியாக கரைந்து செல்கின்றது. இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகக் கூறி 450 பில்லியன் ரூபா நிதி நாணயத்தாள்களை தேசிய பொருளாதாரத்தில் புழக்கத்தில் விடுவதற்கு ஆட்சியாளர்கள் செயற்பட்டதன் பிரதிபலனாக குழப்பமும், சிக்கல்களும் மேலும் அதிகரித்துள்ளன.
இந்த சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகளில் இருந்து நாடென்ற ரீதியில் நாம் வெளியே வரவேண்டும். சிக்கல்களின் முடிச்சுகளை அவிழ்க்க வேண்டும். அதற்கு தற்காலிக ப்ளாஸ்டர் தீர்வுகளோ அல்லது குறுகிய வழிகளோ இல்லை.
இந்த அபாயகரமான நிலைமையில் இருந்து மீள்வதற்கு நீண்டகால பரிபூரணத்துவமிக்க பொருளாதாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பல சந்தர்ப்பங்களில் ஆட்சியாளர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளார். அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் கூறினார் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.