பெண்கள் வெளிநாடு செல்லும் எண்ணிக்கையை குறைத்து சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்று மகளிர் மற்றும் சிறுவர் ஊக்குவிப்பு அமைச்சர் சாந்தனி பண்டார தெரிவித்துள்ளார்.
கல்நேவ பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குறைந்த வருமானமுடைய குடும்பங்களிலுள்ள பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான கடனுதவியை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், குடும்பப் பெண்கள் வெளிநாடுகளுக்கு தொழில்வாய்ப்பை நாடி செல்வதனால் பல்வேறு பிரச்சினைகள் உருவாகின்றன. மகளிர் திட்டத்திற்கு அனைத்து அமைச்சுக்களில் இருந்தும் 25 வீதமான பங்களிப்பு வழங்கப்படுகிறது. நாம் பணம் சம்பாதிப்பதற்கு அரசியலுக்கு வரவில்லை. நாம் உருவாக்கும் நல்ல திட்டங்களே இறுதியில் மிகுதியாகும்.
பிரதமரின் ஆலோசனையின் பேரில் 17 வங்கிகளை தொடர்புபடுத்தி சுயதொழிலுக்கான கடனுதவிகளை வழங்கியுள்ளோம். இதனூடாகவே நாம் பத்து இலட்சம் தொழில்வாய்ப்புக்களை உருவாக்குகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.