வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக செல்வதன் காரணமாக மனித கடத்தல் இடம்பெறும் நாடுகள் பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக வெளிநாட்டு செல்வதன் மூலம் மனித கடத்தல் இடம்பெறும் நாடுகள் பட்டியலில் இலங்கையை நான்காவது முறையாகவும் சர்வதேசம் இணைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு இவ்வாறு பாரதூரமான பிரச்சினையை ஏற்படுத்தியுள்ள இந்த செயற்பாட்டை கட்டுப்படுத்த தமது அமைச்சு பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளது.
இந்த நிலைமையை மாற்றுவதற்காக வெளிவிவகார அமைச்சு, நீதி அமைச்சு உட்பட பல நிறுவனங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுடன் இணைந்து செயற்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமை தொடர்ந்தால் இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு நிதி உதவிகளுக்கு ஆபத்து ஏற்படும் என தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.