மருத்துவ காப்புறுதி எடுப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த கால எல்லை நிறைவடையவுள்ள நிலையில் உடனடியாக அனைவரையும் மருத்துவ காப்புறுதி எடுக்குமாறும் தவறின் மாதாந்தம் 500 திர்ஹம் அபராதமாக செலுத்தவேண்டும் என்றும் டுபாய் அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்துக்குள் அனைவரும் மருத்துவ காப்புறுதி எடுக்கவேண்டும் என்று அந்நாட்டு அரசாங்கம் புதிய சட்டம் உருவாக்கப்பட்டிருந்த நிலையில் காலம் தேவையென்பதை கவனத்திற்கொண்டு இம்மாதம் இறுதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இம்மாதத்துக்குள் மருத்துவக்காப்புறுதி பெறாதவர்கள் மாதாந்தம் 500 திர்ஹம் அபராதமாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டுபாயில் வாழ்வோரில் சுமார் 4 மில்லியன் பேர் (98 வீதமானவர்கள்) மருத்துவக்காப்புறு எடுத்துள்ள நிலையில் மீதமுள்ள 80,000 பேர் காப்புறுதி எடுக்கவேண்டியுள்ளது என்று அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. பெரும்பாலும் மனைவி, குழந்தைகள் மற்றும் வீட்டுப் பணிப்பெண்களுக்கான மருத்துவக்காப்புறுதி எடுப்பதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இறுதித் திகதி நெருங்கியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கானவர்கள் காப்புறுதி நிறுவனங்களில் தமது காப்புறுதிக்காக காத்திருக்கின்றனர் என்றும் கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, குறித்த காப்புறுதி சட்டத்தினால் டுபாய் வாழ் புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையான அதிருப்திக்கு ஆளாகியுள்ளதாகவும் காப்புறுதிக் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதிபற்றாக்குறையினால் தமது மனைவி குழந்தைகளை மீண்டும் தாய்நாட்டிற்கு அனுப்பியுள்ளதாகவும் கலீஜ் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.