கப்பல் பொறியிலாளராக தொழில் பெற்றுத் தருவதாக கூறிய இலங்கை முகவர் நிலையத்தை நம்பி மலேசியா சென்று கப்பலில் கூலித் தொழிலாளிகளாக பணியாற்றிய இரு இளைஞர்களை மலேசிய பொலிஸார் மீட்டுள்ளனர்.
மதுசங்க பெரேரா மற்றும் துஷான் காவிந்த டி சில்வா என்ற இரு 21 வயதான பொறியிலாளர்கள் இருவரே கடந்த சனிக்கிழமை (17) இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர் என பெர்னாமா செய்திச்சேவை செய்தி வௌியிட்டுள்ளது. .
கப்பலில் பொறியிலாளர் தொழிலுக்கான ஒப்பந்ததத்தில் கைச்சாத்திட்டுள்ள குறித்த இளைஞர்கள் அதற்காக 325,000 ரூபா வீதம் குறித்த முகவர் நிலையத்திற்கு செலுத்தியுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி இலங்கையில் இருந்த கோலாம்பூர் விமானநிலையத்தை சென்றடைந்த குறித்த இரு இளைஞர்களும் இரவு 11.00 மணியளவில் குன்சிக், சர்வாக் என்ற இடம் செல்வதற்கான பயணத்தை ஆரம்பித்துள்ளனர். மறுநாள் காலை 5.10 மணியளவில் அவர்கள் உரிய இடத்தை சென்றடைந்துள்ளனர்.
அவர்களை மார்ச் 10ம் திகதியன்று சர்வாக் என்ற இடத்தில் இரு இந்தியர்கள் வரவேற்றுள்ளதுடன் சிபு என்ற பிரதேசத்திற்கான விரைவு படச்சேவையில் செல்வதற்கு முன்னர் குறித்த இளைஞர்களுடைய கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு வற்புறுத்தியுள்ளர்.
பிற்பகல் 2.30 மணிளவில் சிபு என்ற இடத்தை சென்றடைந்ததுடன் அங்கு 25 வயதான இந்திய முகவர் அவரை வரவேற்று காரில் சுங்கை ராஜாங் என்ற பிரதேசத்தில் உள்ள கப்பல்துறையில் இருந்த கப்பலொன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்களை கூலித் தொழிலாளிகளாக பணியாற்றுமாறு வற்புறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பணியிடத்தில் இருந்து வௌியே செல்லவும் அனுமதி வழங்கப்படவில்லை.
கடந்த மார்ச் மாதம் 17ம் திகதி மாலை 4.40 மணியளவில் அவ்விடத்தில் இருந்து தப்பிய இரு இளைஞர்களும் வாடகை வாகனத்தில் மத்திய பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். தொடர்ந்து சிபு மாவட்ட பொலிஸ் உயரதிகாரி பிரதி பொலிஸ் மாஅதிபர் ஸ்டென்லி ஜொனத்தன் ரிங்கித் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த இளைஞர்களுக்கு தற்போது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இம்மாதம் 23ம் திகதி பாதுகாப்பு முகாமிற்கு அனுப்புமாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த 25 வயதான இந்திய முகவர் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக சட்டவிரோத ஆட்கடத்தல் சட்டம் 2007 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.