வட கிழக்கு ரோமானியாவில் பணியாற்றும் இலங்கையை சேர்ந்த சுமார் 36 பணியாளர்கள், அங்கிருந்து நாடுதிரும்ப முடியாமல் அநாதரவான நிலையில் இருந்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வட கிழக்கு ரோமானியாவில் உள்ள பொட்டோசனியாவில் உள்ள புடவை தொழிற்சாலையில் பணியாற்றும் இலங்கையை சேர்ந்த சுமார் 36 பணியார்கள், தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்து விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
எனினும், இலங்கை வருவதற்கான விமானம் எதுவும் அற்ற நிலையில், அவர்கள் அநாதரவாக விடப்பட்டுள்ளதாக ரோமானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்ட நிலையில், சகல இலங்கையர்களும் மூன்று வார தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவர் என தெரிவித்து மீண்டும் விமான நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
எப்படியிருப்பினும், இலங்கையுடனான விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், விருந்தகம் ஒன்றில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து தகவல் அறிந்த ரோமானிய தொழில் அமைச்சர் வயோலீற்றா அலக்ஸ்ராண்ரூ, இலங்கையர் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாக ரோமானிய ஊடகம் தெரிவித்துள்ளது.