வௌிநாடுகளில் தொழில் நிமித்தம் செல்லும் பெண்கள் அறியாமை காரணமாகவே பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றனர் என்று பிரதி அமைச்சர் டொக்டர் அனோமா கமகே தெரிவித்துள்ளார்.
அநாவசியமான பிரச்சினைகளில் இருந்து வௌிநாடு செல்லும் இலங்கை பெண்களை பாதுகாப்பதற்கு அவசியமான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
வௌிநாட்டு வேலைவாய்ப்பை நாடிச்செல்வோருக்கான பயிற்சி மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா அம்பாறையில் இடம்பெற்றபோது கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வாழ்வாதாரத்திற்காக பெண்கள் வௌிநாடு செல்வதை என்னால் அனுமதிக்க முடியாது, எனினும் அதற்கு மாற்றுவழி தற்போது இல்லை. அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு துறைக்கு பொறுப்பான அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதிக எண்ணிக்கையான பெண்கள் கிழக்கு மாகாணத்தில் இருந்தே வௌிநாடுகளுக்கு செல்கின்றனர். அவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்காகவே அம்பாறை மாவட்டத்தில் பயிற்சி நிலையம் அமைக்கப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.