வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் ‘இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்’ இணைய முகப்பினூடாக சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், தற்போது 143 நாடுகளிலுள்ள 38,983 க்கும் மேற்பட்ட வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ளனர். இவர்களுள் 3,078 மாணவர்கள், 4,040 குறுகிய கால வீசாவையுடையவர்கள், 27,854 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், 3527 தங்கிவாழ்வோர் மற்றும் 484 இரட்டைப் பிரஜாவுரிமையுடையவர்கள் மற்றும் ஏனைய நபர்கள் உள்ளடங்குவர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளிவிவகார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஏப்ரல் 21 தொடக்கம் தற்போது வரை, பெரும்பாலும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்ட அரச அதிகாரிகள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் என 15 நாடுகளிலிருந்து 3600 வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு மீள அழைத்து வரப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்படக்கூடிய வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் பற்றிய தரவுகளைச் சேகரிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, உள்வரும் வணிக விமானங்களுக்காக விமான நிலையம் மூடப்பட்ட ஒரு வார காலப்பகுதிக்குள், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரமைப்பின் உதவியுடன் 2020 மார்ச் 26 ஆந் திகதி ‘இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்’ இணைய முகப்பை வெளிநாட்டு உறவுகள் அமைச்சு உருவாக்கியது. இந்த இணைய முகப்புக்கு இணையாக, நாட்டிற்கு மீளத் திரும்பி வர விரும்புவோர் பற்றிய தரவுகளை சேகரிக்குமாறு இலங்கைத் தூதரகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பாதிக்கப்படக்கூடிய குழுக்களை அடையாளம் காண்பதற்கும், முன்னுரிமை அளிப்பதற்கும், திருப்பி அனுப்புவதற்குமான அடிப்படையாக இந்த இரண்டு மூலங்களும் செயற்படுகின்றன.
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நலனுக்காக உண்மையான உதவி மையமாக இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல் இணைய முகப்பு செயற்படுகின்றது. இந்த இணைய முகப்பு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, 78,033 இலங்கையர்கள் இதில் பதிவு செய்துள்ளதுடன், முக்கியமாக நாட்டிற்கு மீள அழைத்து வரல் மற்றும் கொன்சுலர் பிரச்சினைகள் தொடர்பான உதவி சம்பந்தமாகவும், ஏனைய செயற்பாட்டு மற்றும் கொள்கை விடயங்கள் சம்பந்தமாகவும் உலகம் முழுவதிலுமுள்ள வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் எழுப்பிய 7,788 கேள்விகளுக்கு, 24/7 என்ற அடிப்படையில் திறம்பட செயற்படும் பிரத்தியேகமான குழுவொன்று பதிலளித்துள்ளது என பொருளாதார விவகாரங்கள் (பலதரப்பு) மற்றும் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் பிரிவின் பதில் பணிப்பாளர் நாயகம் அன்சுல் ஜான் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நாடுகளில் இலங்கையின் பிரதிநிதித்துவம் எதுவும் இல்லாத நிலையில், அருகிலுள்ள இலங்கையின் இராஜதந்திரத் தூதரகங்களுக்கு இலங்கையர்களை வழிநடத்துவதற்கு இந்த இணைய முகப்பு உதவியது மட்டுமன்றி, உலர் உணவுகள், மருந்துப் பொருட்களை வழங்குதல் மற்றும் சில சந்தர்ப்பங்களில் தங்குமிட ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தல் என்ற வகையில், உணவுகள் தேவைப்படும் மற்றும் மருத்துவ அவசர நிலைகளை எதிர்கொள்ளும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய இலங்கையர்களின் வகைகளுடன் இணைப்பதற்கும் உதவியது. புலம்பெயர்ந்தவர்கள் இலங்கைக்கும், குறுகிய காலப் பிரயாணிகள் மற்றும் மாணவர்களுக்கு இலங்கையிலிருந்தும் நிதிப் பரிமாற்றம் மேற்கொள்வது தொடர்பான பிரச்சினைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் இது வழியமைத்துள்ளது. கல்வி நிறுவனங்களில் பிரச்சினைகளை எதிர்கொண்ட மாணவர்களுக்கும், மற்றும் தொழில் ஒப்பந்தங்கள் காலாவதியானவர்கள் வேலையின்மை காரணமாக திரும்பி வருவதற்கு நிர்ப்பந்திக்கப்படாதிருப்பதன் நிமித்தம், புதிய வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை அவர்கள் பெற்றுக் கொள்வதற்கும் உதவியுள்ளன.
முன்னோக்கித் திட்டமிடுவதிலும், அமைச்சு, தூதரகங்கள் மற்றும் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு இடையில் உறவுகள் மற்றும் நேரடித் தகவல் தொடர்புகளை சிறப்பாக மேற்கொள்வதிலும் நம்பகமான பகுப்பாய்வு நிறுவனக் கருவியாக ‘இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்’ இணைய முகப்பு மாறியுள்ளதாக, சனிக்கிழமை (மே 16) இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற தொலைக்காட்சிக் கலந்துரையாடலொன்றில் கலந்து கொண்ட வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்தார். எதிர்காலத்தில் அதன் பயன்பாடு மற்றும் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கு அமைச்சு எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போதைய தொற்றுநோயால் முன்வைக்கப்பட்ட பல சவால்களை எதிர்கொண்டு வெளிநாடுகளிலுள்ள தூதரகங்கள் எவ்வாறு பதிலளித்தன என்பது குறித்து வினவப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், முன்னோடியில்லாத வகையில் அமைச்சு மற்றும் தூதரக ஊழியர்கள் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் தெரிவிக்க வேண்டிய பல பணிகளின் சிக்கல் நிலை குறித்து வெளிவிவகார செயலாளர் மக்களுக்கு விளக்கினார். இலங்கையிலுள்ள இராஜதந்திரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பான விடயங்களை எதிர்கொள்ளுதல், வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களைப் பாதுகாத்தல், நாட்டிற்குத் திரும்பி வர விரும்புவோரின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்தல், பெற்றுக்கொண்ட அரசாங்கங்கள் மற்றும் சமூகங்களுடன் இணைந்து, அந்த நாடுகளில் தங்க விரும்புவோருக்கான நிலைமைகளை தளர்த்துதல், மருத்துவம் மற்றும் உணவு ஆகிய இரண்டிற்குமான அத்தியாவசியப் பொருட்களைப் பாதுகாத்தல், இலங்கை ஏற்றுமதியாளர்கள் தமது இலக்குத் தளங்களை அடைவதை உறுதிசெய்தல் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் போன்ற புதிய தயாரிப்புக்களுக்கான சந்தைகளை கண்டறிதல், கோவிட்-19 நிதியத்திற்கான நிதிப் பெறுமதி ரூபா. 27 மில்லியனை அடையும் வகையில் நன்கொடைகளை சேகரித்தல் மற்றும் இலங்கையின் நலன்களை மேம்படுத்துவதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஏனைய பல்தரப்பு, பிராந்திய மற்றும் இருதரப்பு பங்காளர்களுடன் ஈடுபடுதல் ஆகியன இவற்றுள் உள்ளடங்கும்.
இலங்கையின் 67 தூதரகங்களில் 1/3 தூதரகங்களிலுள்ள அங்கீகாரம் பெற்ற தூதுவர் / உயர் ஸ்தானிகர் மற்றும் வெற்றிடமாகவுள்ள பல இராஜதந்திரப் பதவிகளில், தற்போது இலங்கை வெளிநாட்டு சேவையைச் சேர்ந்த பதில் அதிகாரிகள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது என வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க குறிப்பிட்டார்.
உயர் அழுத்தம் மிகுந்த சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கும், பாதிப்புக்குள்ளான சமூகங்களை கையாள்வதிலும், பாதிப்புக்களை அடையாளம் காண்பதற்காக, பெற்றுக்கொண்ட நாட்டின் சூழ்நிலைகளை பகுப்பாய்வு செய்வதில் விரைவான மற்றும் கணக்கிடப்பட்ட தீர்மானங்களை மேற்கொள்வதற்கும், தூதரகத் தலைவர்கள் பதவிகளில் செயற்பட்டு வரும் பல இளம் இலங்கை வெளிநாட்டு சேவையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு இந்த அனுபவம் குறிப்பிடத்தக்க வெளிப்பாட்டைக் கொடுத்துள்ளதாக அவர் நம்புகின்றார். இத்தகைய அனுபவங்கள் அவர்களது எதிர்கால வாழ்க்கையை வளமாக்கும் அதே வேளை, அவர்களது தொழில் முன்னேற்றத்தில் அவர்களுக்கு நல்லதொரு நிலைமையை ஏற்படுத்தும் என அவர் கருதுகின்றார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.