இலங்கை கடவுச்சீட்டினூடாக சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்ற இந்திய பெண்ணுக்கு 14 வருடங்களுக்கான ஊதியமாக 45,000 சவுதி ரியால் வழங்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் ஜித்தா நகரிலுள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டினால் குறித்த பெண்ணுக்கு 14 வருட ஊதியம் கிடைக்கப்பெற்றுள்ளது.
கடந்த 2003ஆம் ஆண்டு சென்னையிலிருந்து இலங்கை வந்த கேதீஸ்வரி செல்லமுத்து என்ற குறித்த பெண் இலங்கை முகவர் ஒருவரினூடாக முஸ்லிம் பெண் போன்று பயிற்றுவிக்கப்பட்டு, இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தற்கு போலியான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு கடவுச்சீட்டை பெற்றுகொடுத்து சரீனா சாலி என்ற பெயரில் பணிப்பெண்ணாக சவுதி அரேபியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இப்பெண்ணின் பிரச்சினையில் நேரடியாக தலையிட்ட இலங்கை கொன்சல் ஜெனரல் பைசர் மக்கீன் குறித்த பெண்ணுக்கான நீதியை பெற்றுக்கொடுத்துள்ளார். மேலும் இது ஆட்கடத்தல்காரர்களின் செயல் என்பது தௌிவாக தெரிகிறது. மனிதாபிமான அடிப்படையில் இப்பெண்ணுக்கான ஊதியம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இச்செயற்பாட்டுக்கு பின்னாலிருந்து செயற்பட்ட மோசடிக்காரர்கள் தொடர்பில் கொழும்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த பெண் இலங்கை விமானநிலையத்தில் இறங்கியவுடன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவார். இச்செயற்பாட்டின் பின்னணியில் இருப்பவர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை செய்து கண்டறிய வேண்டும் என்பதே என் நிலைப்பாடு என்றும் அவர் அரப் டைம்ஸ் செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்தார்.
இலங்கையில் நீண்டகாலமாக நடைபெற்றுவரும் வௌிநாட்டிற்கு ஆட்கடத்தலை மேற்கொள்ளும் முகவர் கும்பல் எந்தவித சந்தேகமும் ஏற்படுத்தாத வகையில் இத்தகைய ஆட்கடத்தலை நீண்டகாலமாக செய்து வருகிறது என்று பிரதி வௌிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியிருந்தார். அதற்கான தௌிவான ஆதாரம் இது என்றும் ஏனையோரிடம் 15,000 ரூபா முகவர் கட்டணமாகவும் இத்தகையவர்களிடம் 25,000 ரூபா கட்டணமாகவும் அறவிடப்படுவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார் என்றும அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
குறித்த பெண்ணுடன் மேலும் இரு பெண்கள் சென்னையில் இருந்து இலங்கை அழைத்து வரப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டு போலி கடவுச்சீட்டினூடாக குவைத் அனுப்பபட்டனர் என்றும் அப்பெண் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்/ அரப் டைம்ஸ்